ஜெ.தீபா பேரவையிலிருந்தும், ஒட்டுநர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட ராஜா மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா திடீரென பிரபலமானார். அவர் ஜெயலலிதா மரணம், சிகிச்சை குறித்து சந்தேகம் எழுப்பினார். நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் அறிவித்தார்.
ஊடகங்களும் அவருடைய பேட்டியை தொடர்ச்சியாக ஒளிபரப்பின. ஊடக பேட்டிகளில் அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக பேசத் தொடங்கினார்.
ஜெயலலிதாவுடன் உருவ ஒற்றுமை இருந்ததால், ஆரம்ப நாட்களில் ஜெ.தீபா இல்லத்தின்முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தினமும் திரண்டனர்.
தனக்கென்று நிலையான ஓர் அரசியல் கொள்கை இல்லாமல் தினமும் ஒரு கருத்தை ஜெ.தீபா பேச ஆரம்பித்தார். அவரைச்சுற்றி ஒரு குழுவினரை வைத்துக்கொண்டு அவர்கள் சொற்படி நடக்க ஆரம்பித்தார். தினமும் தொண்டர்களை மணிக்கணக்கில் காக்க வைப்பது, அரசியல் தெளிவின்மை காரணமாக கூட்டம் குறைய ஆரம்பித்தது.
பின்னர் திடீரென எம்ஜிஆர்.அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார். இதில் தனது கார் ஓட்டுநர் ராஜாவை பொதுச்செயலாளராக்கினார். பின்னர் அவரை நீக்கிவிட்டு எல்லாம் நானே என்றார். இடையில் ஓபிஎஸ்ஸை ஆதரித்து அவருடன் ஜெயலலிதா சமாதியில் புகைப்படம் எடுத்து பேட்டி கொடுத்தார்.
பின்னர் அவரையும் எதிர்த்தார். இடையில் தீபாவின் கணவர் மாதவனுக்கும் ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மாதவன் பிரிந்துச்சென்று தனிக்கட்சி தொடங்கினார்.
தீபக் அழைத்தார் என்று அதிகாலையில் போயஸ் கார்டனுக்கு சென்று அங்கு ராஜாவை சிலர் தாக்கியதாக அமளியில் ஈடுபட்டார்.
இத்தகைய நடவடிக்கைகளால் அரசியல் அரங்கில் தீபா பற்றிய மதிப்பீடு குறைந்து போனது.
இந்நிலையில், மாதவன் திடீரென தீபாவுடன் இணைந்தார். மாதவனை தாக்க ராஜா முயன்றதாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது மாதவன் மற்றும் ஆதரவாளர்கள் புகார் அளித்தனர்.
ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்ததாக தீபா அறிவித்துள்ளார். இன்று காலை புகைப்படத்துடன் ஒரு செய்தியை அனைத்து பத்திரிகை அலுவலகத்துக்கும் தீபா அனுப்பி உள்ளார்.
அதில், “கட்சி மற்றும் பேரவை விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட ராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், அவர் கொடுத்த விளக்கத்தை ஏற்றும் இன்று முதல் அவர் தீபா பேரவையின் தலைமை நிலைய மாநில செயலாளராக நியமிக்கப்படுகிறார்.கட்சி நிர்வாகிகள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தீபா தெரிவித்துள்ளார்.