லஞ்சப் புகாரில் டி.எஸ்.பி கைது செய்யப்பட்டதை அடுத்து ஆம்பூரில் பொதுமக்கள் கொண்டாடினர். ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டி.எஸ்.பி தன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்பூரில் பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
டி.எஸ்.பி.தன்ராஜ் ,எஸ்ஐ லூர்து ஜெயராஜ் இருவரும் மக்களை அச்சுறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் சாணாங்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். அந்தப் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் அவர், 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் வைத்துள்ளார்.
மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்ய வேண்டும் என்றால் ஒரு லாரிக்கு 20,000 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என டி.எஸ்.பி தன்ராஜ் கூறியுள்ளார்.
மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் பன்னீர்செல்வத்தை அவர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுத்து, அதை விற்பதாக முடிவு செய்தனர். இதற்காக ஆம்பூர் நகர எஸ்.ஐ லூர்து ஜெயராஜ் புரோக்கராகச் செயல்பட்டு பணம் பெற்றுள்ளார். ஒரு லாரிக்கு ரூ.20,000 என 6 லாரிக்கு ரூ.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ரூ.25,000 என மொத்தம் ரூ.1,45,000 வாங்கியுள்ளார். இதில் ரூ.1,20,000 பணத்தை வாங்கிய தன்ராஜ், ரூ.25,000 பணத்தை எடுத்துக்கொண்ட எஸ்ஐ லூர்து ஜெயராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.