துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கோவிலின் பூசாரியான தனபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முத்தையம்பாளையம் கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலை 55 வயதான பூசாரி தனபால் என்பவர் நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பூசாரி தனபால் சிறப்பு பூஜைகள் நடத்தி பில்லி சூனியம், ஏவல், திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் தொடர்பாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.
இந்நிலையில் கருப்பு சாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நடந்த பிடிக்சுாசு வழங்கும் விழாவில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது
இதில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருச்சி மாவட்டஆட்சியர் சிவராசு, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ ஆகியோர் நேரடி விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் கருப்புசாமி கோவில் பூசாரி தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (2)-ன் கீழ் (எதிர்பாராமல் நடந்த விபத்தில் இறப்புக்கு காரணமாக இருத்தல்) துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து அவரை பிடித்து சென்ற போலீஸார் தனியாக ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.