முக்கிய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் தேவையில்லை : மத்திய அரசு எதிர்ப்பு…


இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைய அமைப்பில் மாற்றங்கள் செய்யக் கோரிய பொதுநல மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் போல் தேர்தல் ஆணையத்துக்கு செயலகம் அமைக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. பொதுநல மனுக்கு பதில் அளித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக தேர்தல் தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் தேவை என்றும் பல் இல்லாத பாம்பாக இருக்கிறோம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தேவை. சுதந்திரமாக செயல்பட நிரந்தர தலைமைச் செயலகம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்யும் அதிகாரம் எங்களிடம் இல்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால், அவர்களை தடுக்க முடியாமல் திணறி வருகிறோம். அரசியல் தலையீடு என்பது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகமாக உள்ளது.  பல்வேறு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

எனவே, போதிய அதிகாரம் இல்லாததால் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை. நாங்கள் பல் இல்லாத பாம்பாக செயல்படுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக முக்கியமான அதிகார அமைப்பான தேர்தல் ஆணையம், தங்களுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று கூறி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் தேவையில்லை என்று மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைய அமைப்பில் மாற்றங்கள் செய்யக் கோரிய பொதுநல மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.