பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்ட பட்ஜெட் : ப. சிதம்பரம்…

பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வளர்ச்சியை துரிதப்படுத்துவது, வேலைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பட்ஜெட் குறித்து பேசிய அவர்,

“அடுத்த ஆண்டு 6 முதல் 6.5 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் என கோருவது ஆச்சரியமளிக்கும் வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் உள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி மீண்டெழும் என்பதைக் குறிப்பிடும் வகையிலான எந்தவொரு அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சீர்த்திருத்தங்களையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக நிராகரித்திருப்பது அரசுக்கு சீர்த்திருத்தங்கள் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் படித்துப் பார்த்தாரா என்று தெரியவில்லை.

பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்களும், பிரிவுகளும் இடம்பெற்றிருந்தது அனைவரையும் திகைப்பிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இது தற்போதைய திட்டங்களின் சலவைப் பட்டியல்தான். மிகவும் விஸ்வாசமான பாஜக எம்பி அல்லது ஆதரவாளரால்கூட பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளையும், யோசனைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியாது.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மக்கள் மத்தியில் தோல்வியடைந்துள்ளது எனும் பட்சத்தில், அதே திட்டங்களுக்கு நிறைய நிதி ஒதுக்குவது எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும்?

உலக வர்த்தகத்தில் பெரும் பங்கை அடைவது, வேலைகளை உருவாக்குவது, திறன்களை அதிகப்படுத்துவது, தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது, வளர்ச்சி விகிதத்தை துரிதப்படுத்துவது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றை அரசு கைவிட்டுள்ளது.

இத்தகைய ஒரு பட்ஜெட்டை யாரும் கேட்கவில்லை. பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதற்கு இப்படிப்பட்ட ஒரு பட்ஜெட் தகுதியானதும் அல்ல” என்றார்.