பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து சுர்ஜித் பல்லா ராஜினாமா

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்று வந்த மிகச்சிறந்த பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான சுர்ஜித் பல்லா இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான நிதி ஆயோக் அமைப்பில் விவேக் தேப்ராய், பொருளாதார நிபுணர்கள் ரத்தின் ராய், ஆஷிமா கோயல், ஷமிகா ரவி, சுர்ஜித் பல்லா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் அவர் இன்று தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
இது குறித்து சுர்ஜித் பல்லா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “ பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து நான் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நேற்று திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் ஆலோசனைக் குழுவில் இருந்த முக்கிய உறுப்பினரும், பொருளாதார வல்லுநருமான சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.