முதல்வர் எடப்பாடி இல்லம் வருவோருக்கு 3 வேளையும் உணவு…

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி உபசரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது, அவரது ராமவரம் தோட்டத்தில் வரும் தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது.

அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் ராமவரம் இல்லம் ஒரு அட்சய பாத்திரமாகவே இருந்தது. அதே பாணியில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கிரீன்வேஸ் சாலை வீட்டுக்கு வருவோருக்கு தினமும் உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

காலையில் இட்லி, தோசை, பொங்கல், வடையும் மதியவேளையில் அரிசி சோறு, சாம்பார், காரக்கொழப்பு, கூட்டு, பொறியலும் இரவு வேளையில் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை வழங்கப்படுகிறது.
இதுதவிர, வெயில் அதிகமாக இருந்தால் மோர், பழச்சாறு மற்றும் குறிப்பிட்ட இடைவேளைகளில் தேநீர், காபி, சமோசா ஆகியவையும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடுவதற்காகவே டைனிங் டேபிள், கை கழுவும் இடம், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் மட்டுமின்றி கிரீன்வேஸ் சாலையில் காவல் பணியில் ஈடுபடும் போலீஸாரும் முதலமைச்சர் வீட்டில் சாப்பிடுவது வழக்கமாகவுள்ளது.

இதனால் முதலமைச்சர் எடப்பாடி வீட்டில் உணவு சாப்பிடும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எம்.ஜி.ஆருக்கு செய்யும் உரிய மரியாதை இதுதான் என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.