டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கான நிலுவை தொகை ரூ.1800 கோடியை தர வேண்டும் என்றார்.
டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக்குழுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மா 24.3.2012 அன்று விஷன் தமிழ்நாடு 2023 என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதில் அவர் வெளியிட்ட திட்டங்கள், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி மேம்பாடுகளை கொண்டது.
இந்தியாவில் மாநிலங்கள் கலாச்சாரம், பண்பாடு ரீதியாக மாறுபட்டு உள்ளது. எனவே அதற்கேற்ப மாநில அரசுகள் திட்டமிடவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கேற்ப மத்திய அரசு உதவிகள் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும். தமிழ்நாட்டில் நீர்பாசன திட்டங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
2016-17ஆம் ஆண்டு ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாருவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி 30 மாவட்டங்களில் 1500 பணிகள் செய்யப்பட்டன. மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சமயத்தில் சில பரிந்துரைகளை தெரிவிக்க விரும்புகிறேன். நோபல் பரிசு வழங்கப்படுவது போல காந்தி பசுமை பூமி விருது வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள காந்தி கிராம ஊரக பல்கலைக்கழகத்தை ரூ.500 கோடியில் மேம்படுத்த வேண்டும்.
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து சீரமைக்க வேண்டும்.
தமிழகம் நீர்தேவைக்கு காவிரியை சார்ந்துள்ளது. எனவே காவிரி ஆணையத்தை உடனடியாக அமைத்து அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. காரணமாக ரூ.6ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் இன்னமும் வழங்கப்படவில்லை
கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1804 கோடி தர வேண்டி உள்ளது. பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்த நிலுவைத்தொகையை அனுமதிக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.