எகிப்தில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு: 235 பேர் பலி!

எகிப்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில்  235 பேர் கொல்லப்பட்டனர்.

 

வடக்கு சினாய் நகரில் (northern Sinai) உள்ள அல் ராடா (Al Rawdah) மசூதியில் ஏராளமானோர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த போது அங்கு திடீரென குண்டுவெடித்தது. இந்த அதிர்ச்சியை எதிர்கொண்டு, சுதாரிக்கும் முன் முகத்தை மறைத்தபடி உள்ளே நுழைந்த சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டே முன்னேறினர். மசூதியிலிருந்து வெளியே ஓடியவர்களையும், அவர்கள் விரட்டி விரட்டி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. வழிபாட்டுத்தலத்தில் கண்மூடித்தனமாக அரங்கேற்றப்பட்ட இந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில், 235க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை எனவும், சம்பவம் குறித்து அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி (Abdel Fattah al-Sisi) உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் இதுவரை இவ்வளவு குரூரமான தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Egypt attack: More than 235 killed in Sinai mosque