தேர்தல் பணத்தை ஆட்டையைப் போட்டார் என எச்.ராஜா மீது குற்றம் சாட்டி சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
எச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் சோ.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதத்தை மாநில தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
இது ஏதோ.. உட்கட்சி விவகாரம் என்று நினைத்து பாஜக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இது உட்கட்சி விவாகாரம் இல்லை, என தொடங்கிய நிர்வாகிகள் எச்.ராஜா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். ஒருசிலர் கொந்தளித்தனர்.
தற்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக தலைமை தோல்வி குறித்தும்,அனுப்பிய பணத்திற்கான செலவு கணக்கு குறித்தும் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் மாநிலத் தலைமை கேட்டதால் வந்த விவாரம் என ராஜாவுடன் 1989- லிருந்து பயணம் செய்த நிர்வாகி கூறிய செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
2019- மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய எச். ராஜா தற்போது நடைபெற்ற காரைக்குடி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
தற்போது தன் தோல்விக்கு மாவட்ட நிர்வாகிகள் தான் காரணம் என மாவட்ட தலைவர் செல்வராஜ் முதல் பல நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல நிர்வாகிகளை அவமதித்தும் உள்ளார்.
இந்நிலையில்தான் மாநிலத் தலைமைக்கு மாவட்டத் தலைவர் சோ.செல்வாராஜ்,காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன், தேவகோட்டை நகர பாஜக தலைவர் குரு. பஞ்சநான்,மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி திருமதி ஜெயமணி, சிவகங்கை மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பாலமுருகன் ,கண்ணங்குடி ஒன்றியத் தலைவர் பிரபு, மானாமதுரை பாண்டி உள்ளிட்ட பல நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்தை மாநிலத் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் நிர்வாகி ஒருவர் பேசும் போது, எச் ராஜா மற்றும் அவரது மருமகன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த சூர்யா என்ற சூரியநாராயணன் தனது மாமனார் தோல்விக்கு என்ன காரணம் என்ற என்பதை ஆராயாமல் சுய பரிசோதனை செய்யாமல் தான் செய்த ஏதோ ஒரு தவறை மறைப்பதற்காக கீழ்மட்ட நிர்வாகிகளான எங்களை காரணமாகக் காட்டி பழி சுமத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் ராஜா அவர்கள் இல்லத்திற்கு நான் சென்றபோது அவரது மருமகன் என்னை வெளியே போடா என்று தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தினார். 18 ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்ட எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை என்னை நிலைகுலைய வைத்துள்ளது என்றார்.
மேலும் அவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறிய படி ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு பாஜக தலைமை ரூ. 13 கோடி கொடுத்தது உண்மை என்றார். காரைக்குடி தொகுதிக்கு பணப் பட்டுவாடா செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மாவட்டத் தலைவர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், சந்திரசேகர்,டால்பின் ஸ்ரீதர்,சூரிய நாராயணன் (எச்.ராஜா, மருமகன்) நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் தொல்வி குறித்தும் பண பட்டுவாடா குறித்தும் மாநிலத் தலைமை கேள்வியெழுப்பியது. இதற்கு ராஜா தான் தோற்றதற்கு கட்சி நிர்வாகிகள் காரணம் என குற்றம் சாட்டினார்.பணப்பட்டுவாடா குறித்து ராஜா தரப்பு பதில் கூறாமல் மவுனம் சாதித்தது.
ஆனால் மாவட்டத் தலைவர் செல்வராஜ் நிர்வாகிகள் பலர் தங்கள் கைப்பணம் செலவழித்து இரவு பகல் பாராமல் வேலை செய்தனர். மக்களிடம் நம்பிக்கை பெற முடியவில்லை இருந்தும் அதிக வாக்குகள் பெற்றோம் என்று கூறியதுடன் எங்களுக்கு தேர்தல் நேரத்தில் எந்த பணமும் கைக்கு வரவில்லை என்றார். இது குறித்து நிர்வாகிகளிடம் கேட்ட செல்வராஜ் பணம் யாருக்கு வந்தத என்றார் அனைவரும் மறுக்கவே தலைமைக்கு தகவல் தெரிவித்தார்.
பணப்பட்டுவாடா குழுவில் இருந்த சந்திரசேரனிடம் கேட்டபோது அவர் தன்னிடம் 3 கோடி ரூபாய்க்கு கணக்கு உள்ளது என்றார். அவர் ராஜா மற்றும் மருமகன் சூரிய நாராயணனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனே சூரிய நாராயணன் அனைவரையும் அழைத்து வவுச்சரில் கையெழுத்து வாங்கி கணக்கு காட்டுங்கள் என்றார். செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து தேர்தல் வேலை செய்யவில்லையென நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி திசை திருப்பினார் ராஜா.
தேர்தல் நேரத்தில் தனது சொந்தப் பணம் ரூ.10 லட்சம் கொடுத்திருந்தார் மாவட்டத் தலைவர் செல்வராஜ், அவர் ராஜாவிடம் திருப்பித் தருமாறு கேட்டபோது தொண்டர்களிடம் பெற்ற பணம் தானே எனக்கூறி பணத்தை தரமறுத்து விட்டார். இந்நிலையில் மாநிலத் தலைமைக்கு மாவட்ட தலைவர் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அவரைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளும் ராஜினாமா கடிதத்தை மாநில தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் முறையாக தேர்தல் பணப்பட்டுவாடாவை ராஜா தரப்பு செய்யாமல் நிர்வாகிகள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்துள்ளனர். பணம் முழுவதும் ராஜாவின் மருமகன் மூலம் ‘ஸ்வாகா’ செய்து தங்கள் பாக்கெட்டில் வைத்து விட்டு எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார் என்றார் அந்த நிர்வாகி.
இது குறித்து மாவட்டத் தலைவர் செல்வராஜ் பேசும் போது -நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். வரும் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தகுந்த ஆதாரங்களுடன் உண்மையைக் கூறுகிறேன் என்றார்.
இதனிடையே மாநிலத் தலைமை செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜினாமாவை ஏற்க மறுத்ததுடன் சமாதான முயற்சியும் மேற்கொண்டது. ராஜாவால் ஏமாற்றப்பட்டு பழிச் சொல்லுக்கு ஆளானதால் ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளதா தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்.ராஜா கடந்த 30 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் பாஜகவில் யாரும் மேல் வரக்கூடாது என்பதில் மிகவும் சாமாத்தியமாக செயல் பட்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார் ஒரு நிர்வாகி .2001-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய திமுக நகர செயலாளர் சொக்கலிங்கத்தால் தான் ராஜா சொற்ப வாக்குகளில் வென்றார் எனவும் கூறினார். தற்போது நடந்த தேர்தலில் ரூ. 10 கோடிக்கு மேல் அபகரித்து விட்டு நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டுகிறார் ராஜா என்றார்.
தற்போது ரூ.4 கோடி செலவில் வீடு கட்டுவதா காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலத் தலைமையோ மாவட்ட தலைவர் ராஜினாமா பற்றி மத்திய தலைமைக்கு என்னபதில் சொல்வது எனத் தெரியாமல் மாவட்ட தலைவரிடம் பேசி வருகிறதாம்.
எப்படியோ ராஜா தனது வாய்சாமாத்தியம் போல் பணத்தை ஆட்டையைப் போடுவதில் கில்லாடி என்கின்றனர் பாஜக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் மாவட்டத் தலைவர் செல்வராஜ் எதை முன்வைக்கப் போகிறார் ..
சமாளிப்பாரா ராஜா..
பொறுத்திருந்து பார்ப்போம் ..
செய்தி & படங்கள்
சிங்தேவ்