எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் செலவினங்களை குறைக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தி உள்ளனர் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக் காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர்.
மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்தவாகனங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விபத்துக்கு ஏற்பட காரணம் என்ன?
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்க அதில் உள்ள பேட்டரி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது, லித்தியம் அயன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பேட்டரி அனைத்தும் சேதாரமோ அல்லது மின் கசிவு போன்ற காரணங்களால் தீப்பிடிக்கின்றன.
ஒரு முறை தீ பிடித்துவிட்டால் இந்த லித்தியம் அயன் பேட்டரி அணைப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் மூலம் தீயை அணைத்தால் பேட்டரி ஹைட்ரஜன் கேஸ் மற்றும் லித்தியம் ஹைட்ட்ராக்ஸைட் வாயு வெளியிடும். இந்த கேஸ் பெரும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள கேஸ் எனக் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை ஒன்றிய சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இதுதொடர்பாக ஆய்வு செய்து டி.ஆர்.டி.ஓ அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அந்த அறிக்கையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சரிவர பரிசோதிக்கப்படாமல் அவசரகத்தியில் விற்பனைக்காக சந்தைகளுக்கு அனுப்பப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமல்லாது, செலவினங்களை குறைக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தி உள்ளனர்” என தெரிவித்துள்ளது.