முக்கிய செய்திகள்

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்து காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு திட்டம்..


மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கந்தேல்வால் (Praveen Khandelwal) இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். வர்த்தகர்கள் அனைவரும் தங்களது வரவு – செலவு நடவடிக்கைகளை முழுமையாக மின்னணுப் பரிவர்த்தனைக்கு மாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காசோலை நடைமுறை ஒழிக்கப்படுமானால், அது மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பணமதிப்பிழப்பிற்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 100 கோடியை எட்டிய மின்னணுப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை, தற்போது 87 கோடி என்ற அளவில் நிலைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.