முக்கிய செய்திகள்

பொறியியல் கல்வி: திறப்பதிலும் அவசரம், மூடுவதிலும் அவசரமா? – தலையங்கம்

 

நாடு முழுவதும் உள்ள 800 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் முளைப்பதற்கு வழிவகுத்த அரசின் அவசரகதியான கல்விக் கொள்கை எந்த அளவுக்கு விமர்சனத்துக்கு உரியதோ, அதே அவசர கோலத்துடன் அரசு தற்போது இந்த முடிவை எடுக்கிறது.

அண்மையில் வேலைவாய்ப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பொறியியல பட்டதாரிகளில் 95 விழுக்காட்டினருக்கு வேலை கிடைப்பதில்லை என்ற யதார்த்தம் தெரிய வந்துள்ளது. இந்த உண்மை ஆய்வு இல்லாமலேயே நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான். ஊடகங்கள், பத்திரிகைகள் உட்பட படிப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லாத பல்வேறு துறைகளிலும், பொறியியல் பட்டதாரிகள் பரவலாக பணிவாய்ப்பைப் பெற்றுவருவதே இதற்குச் சான்று. கல்வியைத் தனியார் மயமாக்கி, அதற்கு தொடர்பில்லாதவர்களின் கையில் தாரை வார்த்ததில் இருந்து தொடங்கிய இந்தச் சிக்கலை, ஏதோ வெறும் நிர்வாக போதாமை என்பது போலப் பேசுவது, பிரச்சனையின் தீவிரத்தில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் செயலே தவிர வேறு எதுவும் இல்லை.

ஐஐடி கல்வி நிறுவனங்களுக்கு நிகராக பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரமில்லை என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு கருதுவதாக கூறப்படுகிறது. அப்படி என்றால், இருக்கும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த என்ன வழி என்று பார்க்க வேண்டும். அல்லது, அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்தி அவற்றை ஐஐடிக்கு நிகராக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதால் அவற்றை மூடுவோம் எனக் கூறுவது, “கடைவிரித்தோம் கொள்வாரில்லை” என்பதைப் போன்ற வியாபாரத்தனமான முடிவாக அன்றோ உள்ளது. இதில், புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான கையேட்டை வேறு வெளியிட்டிருக்கிறார்கள். அந்தக் கையேடு கூறும் (கடுமையான?) நிபந்தனை என்ன தெரியுமா… புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க மாநில அரசு அனுமதித்தால் மட்டுமே, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு அனுமதிக்குமாம். மாநில அரசு யாருக்கெல்லாம் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி கொடுக்கும் என்பதைத்தான் பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோமே! இருக்கும் கல்லூரிகளே இழித்துக் கொண்டிருக்கையில் புதிய கல்லூரிகள் எதற்கு?

கல்வியை வியாபாரமாக்கும் நாலாந்தர அரசியல் பார்வைக்கு இந்தச் சமூகம் கொடுத்துக்கொண்டிருக்கும் விலைதான், பொறியியல் கல்வியின் இன்றைய இரண்டும் கெட்டான் நிலை. ஆளுவோரின் பொறுப்பற்ற  முடிவுகள் எப்படி  ஒருதலைமுறையினையே சீரழிக்கக் கூடியது என்பதற்கும் பொறியியல் கல்வியின் சீரழிவு ஓர் சிறந்த உதாரணம். கல்வி என்பது வெறும் கட்டமைப்பு வசதி சார்ந்தது மட்டுமல்ல. அதையும் கடந்த அறிவுசார் நுட்பக்கட்டமைப்புகள் அவசியம். அதுமட்டுமல்ல, கலை, இலக்கியம், மொழி உள்ளிட்ட மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு உதவும் பண்பாட்டுத் தன்னுணர்வு சார்ந்த கல்வியை, ஒன்றுக்கும் உதவாதது என்பதைப் போன்ற சித்திரத்தை இளையதலைமுறையினர் மனதில் விதைத்ததற்கான விளைவுகளையும் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டின் கல்வியமைப்பையே மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்பது வேறு விவகாரம். அதற்கு அறிவு நேர்மையும், கருத்து நேர்மையும் உள்ள தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. அதுவரை, குறைந்த பட்சம் இருக்கும் கல்வியை தங்களது தேவைக்கேற்ப கொத்திக் குதறிச் சிதைக்காமல், அதனை மேம்படுத்தும் முயற்சிகளையேனும் தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுக்கலாம்.

பொறியியல் கல்லூரிகளை மூடுவது மட்டுமே அதுசார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வல்ல. ஒரு வகையில் கிராமப்புற மாணவர்களின் பொறியியல் கல்விக் கனவைச் சாத்தியமாக்கிய அம்சத்தையும் நாம் மறுத்துவிட முடியாது. எனவே, அதனை சீரமைத்து மேம்படுத்துவது எப்படி என்று ஆய்வு செய்யலாம். கடைகளைத் திறப்பதைப் போல புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதை இனியேனும் நிறுத்திவைக்கலாம். கல்வி கண்போன்றது என்ற எளிய பழமொழி சொன்ன பாடத்தைக் கூட மறந்து விட்டதன் விளைவே, இப்போது நாம் சந்திக்க நேர்ந்திருக்கும் விபரீதங்களுக்கான காரணம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?     

Engineering Education: Review on AICTE decision