இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கோலி எட்டியுள்ளார், மேலும் முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் ஆடி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 23 ரன்கள் சேர்த்தபோது, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் கோலி இணைந்தார்.
அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக விராட்கோலி தனது சதத்தை பதிவு செய்துள்ளார். அவரின் 22 வது சதமாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக தற்போது விராட் கோலி 977 ரன்களுடன், சராசரியாக 44.40 ரன்களுடன் இருந்தார். இதுவரை இந்திய வீரர்கள் 12 பேர் இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
அதில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 7 சதம், 13 அரை சதம் உள்பட 2,535 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, சுனில் கவாஸ்கர் (2,483 ரன்கள்), ராகுல் டிராவிட்(1,950), குண்டப்பா விஸ்வநாத் (1,880), திலிப் வெங்சர்க்கர் (1,589), கபில் தேவ் (1,355), முகம்மது அசாருதீன் (1,278), விஜய் மஞ்ச்ரேக்கர் (1,181), மகேந்திர சிங் தோனி (1,157), பரூக் எஞ்சினியர் (1,113) ஆகியோர் ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 9 ஆட்டங்கள் உள்நாட்டிலும், 5 போட்டிகள் இங்கிலாந்திலும் விளையாடியுள்ளார்.
கங்குலி சாதனையை முறியடிப்பாரா?
கேப்டன் பொறுப்பேற்றபின் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகளைப் பெற்றுள்ளது. தோனிக்கு அடுத்தார்போல், கங்குலி தலைமையிலும் இதே 21 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
அதிகபட்சமாக தோனி தலைமையில் இந்திய அணி 27 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதில் தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்று 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
கங்குலி தலைமையில் 49 போட்டிகளில்விளையாடிய இந்திய அணி 21 வெற்றிகளைப் பெற்றது. ஆனால், இவர்கள் இருவரைக் காட்டிலும், கோலி தலைமையில் இதுவரை இந்திய அணி 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 21 வெர்றிகளைப் பெற்றுள்ளது. இதில் கோலி தலைமையில் இந்திய அணி 12 தொடர்களில் 2 தொடர்களை மட்டுமே இழந்துள்ளது.
தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் கங்குலியின் தலையில் 21வெற்றிகள் பெற்றதை கோலி முறியடிப்பார்.
இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கேப்டன்களில் 2-வது கேப்டன் எனும் பெருமையை கோலி பெறுவார்.