பொறியியல் படிப்புக்கு நீட் தேர்வு..சமூகநீதிக்கு சாவுமணி: ராமதாஸ் கடும் சாடல்…


மாநில உரிமைகளைப் பறிக்கும் பொறியியல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு தழுவிய அளவில் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளை வலியுறுத்தப் போவதாகவும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியிருக்கிறார்.

பொறியியல் படிப்புக்கான நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளை கட்டாயப்படுத்தப்போவதில்லை என தொழில்நுட்பக் கல்விக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இப்போது நீட் தேர்வை மீண்டும் வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இத்தகவலை தெரிவித்த அவர், பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதுவது தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.

பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனையை மத்திய அரசு சுமார் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2009&ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக கபில் சிபல் பதவியேற்ற நாளில் இருந்தே இந்த யோசனையை வலியுறுத்தி வந்தார்.

சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், இடையில் நீட் தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதன்பின் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நிரந்தரமாக்கி விட்ட மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வைத் திணிக்கத் துடிக்கிறது.