ஒரு பெண்ணுக்கு திருமண பந்தம் என்பது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை. அந்தக் காலம் போல அதுஅது காலாகாலத்துல நடக்கும் என்று அமைதியாக இருக்கமுடியாது. பெண்ணும் பெண்ணைப் பெற்றோரும் திருமணத்திற்காக தயாராகவேண்டியிருக்கிறது. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்றிருக்கமுடியாது.
ஒரு காலத்தில் பணக்கார திருமணச் சடங்குகள் மாதக்கணக்கில் நடந்த வரலாறு இருக்கிறது. அவை தற்போது மெல்ல மெல்ல குறைந்து தாலி கட்டியதும் கூட்டம் காலியாகிவிடுகிறது. மதிய சாப்பாட்டுக்கு ஆட்களே இருப்பதில்லை. இது நவீன காலத்தின் அடையாளம். அனைத்து மதங்களிலும் திருமணத்திற்கு பிரத்யேக சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன. இல்லற வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்ல புரிதல் ஏற்படவேண்டும். தனிப்பட்ட முறையில் அதற்கான மனத்தயாரிப்புகள் இருவருக்குமே தேவைப்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் வெளிப்புற அழகு, படிப்பு, பொருளாதார அடிப்படையில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. எதார்த்தம் வேறு. திருமணத்தை முன்வைத்தே பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள். பணமும் படிப்பும் தேவைதான். படித்தால்தான் பணம் கிடைக்கும். அதுதான் வாழ்வில் வளர்ச்சியைத் தருகிறது. ஆனால் அதுமட்டுமல்லவே வாழ்க்கை. திருமணத்திற்கு மனரீதியான தயாரிப்பு வேண்டும். மென்டல் மெச்சூரிட்டி லெவல் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது. அதேபோல உடல்ரீதியான மெச்சூரிட்டியும் மிகத் தேவையானது.
தற்கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கு கூடுதல் எடை இருக்கிறது. ஒபிசிட்டி என்று ஸ்டைலாக அழைக்கிறோம். ஒன்று குண்டாக தொப்பையுடன் இருக்கிறார்கள். அல்லது ஸீரோ சைஸ் என்று ஒல்லிக்குச்சியாக எதுவும் சாப்பிடாமல் போஷாக்கு இல்லாமல் காட்சியளிக்கிறார்கள். இரண்டுமே தவறான முன்னுதாரணங்கள். நல்ல உடல்நலத்துடன் வளத்துடன் இருக்கவேண்டும். சிலரிடம் நல்ல தாயாக இருப்பதற்கு அறிகுறியே இருப்பதில்லை. சிலர் தாயாகவே விரும்பவில்லை.
திருமணம் ஓர் ஆரம்பம். அதைத் தொடர்ந்துதான் வாழ்க்கைப் பயணமே ஆரம்பமாகிறது. பெற்றோர்கள் கஷ்டம் கொடுக்காமல் அல்லது வீட்டின் சிரமங்கள் தெரியாமல் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அதுவே பின்னாளில் அவர்கள் வளர்ந்து நிற்கும்போது சமாளிக்கமுடியாமல் திணறுவதைப் பார்க்கிறோம். சிறுபிராயத்தில் இருந்து வளர்ப்புமுறையின் வழியாக வாழ்க்கை அறிமுகப்படுத்தப்படவேண்டும். எது எதார்த்தம், எது ஆடம்பரம், எது பொய்யானது, எது உண்மையானது என்ற புரிதல் ஏற்படவேண்டும்.
திருமணத்திற்குத் தயாராகுதல் என்பது ஒரே நாளில் நடப்பதல்லை. சமூக குடும்ப வாழ்வில் இருந்து அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் புரிந்துகொண்டார்கள். இன்றைய இளம்பெண்களிடம் எதையாது சொல்லத் தொடங்கினால், அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற பாவனை காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் நாம் சொல்ல வந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது. பட்டுத் தெரிந்துகொள்ளும்போது அம்மா சொன்னாளே என்று உணர்வார்கள்.
நன்றாக படித்திருக்கிறார்கள், கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.குறையில்லை. ஆனால் அது போதும் என்ற மனநிலைதான் தேவையற்றது. எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். பத்தாம் வகுப்பு படித்திருந்தாலும், பிஇ படித்திருந்தாலும் சரி. மனப்பக்குவம் என்பதும் எதார்த்த வாழ்க்கையை புரிந்துகொள்வதும் வேறு. படிப்புக்கும் பிராக்டிக்கல் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை.
திருமணத்திற்குத் தயாராகுதல் என்பது மனரீதியாக தயாராதல், உணர்வுபூர்வமாக தயாராதல், ரெசிஸ்டன்ஸ் எனப்படும் தாக்குப்பிடிக்கும் தன்மை வேண்டும். எதுவாக பெரியவர்களிடம் ஷேர் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஒரு காலத்தில் இருந்தன. அது குறைந்துவருகிறது. பெரியவர்கள் தனியாக இருக்கிறார்கள். அதைவிட ஈகோ பெரிய விஷயமாக இருக்கிறது. ஏன் அவரிடம் போய் சொல்லவேண்டும். தலை முழுவதும் ஈகோவை சுமந்து அலைகிறார்கள். அதை சிறுபிராயத்தில் இருந்து ஊதி வளர்ப்பது பெற்றோர்கள்தான். வீட்டில் கிடைக்கிற எக்போஸர், வேண்டாத முடிவுகளை எடுக்க வைக்கிறது.
கஷ்டநஷ்டங்களைப் பார்த்து வளர்கிற குழந்தைகள் சமாளிப்பார்கள். நெளிவுசுழிவுகளை புரிந்துகொள்வார்கள். வளரும்விதத்தால் வேறுபடுகிறார்கள். சில நேரங்களில் நண்பர்களால் முடிவுகளை எடுப்பவர்களாக பெண்களும் ஆண்களும் இருக்கிறார்கள். மேரேஜ் வெரி போர் என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். திருமணமே வேண்டாம் என்று தள்ளிப்போடுகிறார்கள். சில நாட்களுக்கு புதுப்பெண் ஒருத்தியைப் பார்த்தேன். எப்படி வாழ்க்கை போகிறது என்று கேட்டேன். “ஏதோ போகுது ஆன்ட்டி” என்றாள். வீட்டுக்குப் போகலையா என்றால், அவ சமைச்சுக்கிட்டு இருப்பான். லேட்டாகப் போகலாம் என்றாள். அதில் தவறில்லை. ஆனால் எத்தனை நாளைக்கு சமையல் எதுவும் செய்யாமல், வாழ்ந்துவிடமுடியும். எனக்குப் புரியவில்லை. நடத்தையும் அணுகுமுறையும் முக்கியமாகப்படுகிறது. இளம் பெண்கள் வீட்டு வேலை செய்வதையும், சமையல் செய்வதையும் தேவையற்றது என்று நினைக்கிறார்கள். நம்ம வீட்டு வேலைகளை செய்வதில் நமக்கு ஏன் தயக்கம் என்று புரியவில்லை.
எதையோ நிஜம் என்று நம்பிக்கொண்டு வாழ்கிறார்கள். திடீரென வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்போது தாங்கும் சக்தியில்லாமல் சோர்ந்துபோகிறார்கள். எப்போதுமே எதார்த்தம் புரிந்தால், எந்த துன்பம் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றிபெறமுடியும். அல்லது அதை கடந்துபோகமுடியும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் காரணம் நட்புவட்டம். அதை எப்படி தேர்ந்தெடுப்பது?
தொடரும்…