ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு

வறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பாஜக சார்பில் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக ரூ.2000 உடனடியாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இது மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பிரதமர் மோடி பாணியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உடனடிப் பணப்பலன் தரும் நிதியுதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராசமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து, கஜா புயல் பாதிப்பு மற்றும் வறட்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 60 லட்சம் அமைப்புசாரா ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போலவே விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் கேட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 943 பேரில் 239 பேருக்கு பணி வழங்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

இதேபோல் திமுக உறுப்பினர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்தவுடன் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களே இல்லாத சூழலை தமிழக அரசு உருவாக்கும் என்றார்.

 இதனிடையே, பேரவையில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், திருப்பூர் வடக்கு பகுதியில் புதிய அரசு மகளிர் கல்லூரி உருவாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார். 

மேலும், இந்த ஆட்சியில் 65 புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஆயிரத்து 585 புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.