முக்கிய செய்திகள்

தினகரனும், திமுகவும் கூட்டு சதி: ஈபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தினகரனும் திமுகவும் செய்து கொண்ட ரகசிய உடன்பாட்டின் விளைவுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இரட்டை இலை சின்னத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்து விட வேண்டும் என்பதற்காகவும் டிடிவி தினகரனும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் இணைந்து செய்து கொண்ட ரகசிய உடன்பாட்டின் விளைவுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என்று தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரனுடன் திமுக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு தனது வாக்கு வங்கியை தினகரனுக்கு திருப்பி விட்டு அதிக வாக்குகள் பெறச் செய்திருக்கிறது என்று அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த வெற்றியை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இந்தத் தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த சட்டமன்றத் தொகுதிக்கும் பொருந்தாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களை ஏமாற்றி பெற்றுள்ள இந்த வெற்றி அதிமுகவுக்கு எந்த ஒரு சரிவையோ பின்னடைவையோ ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஆர்.கே.நகரில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் அதிமுகவிற்காகப் பாடுபட்ட கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

EPS   – OPS Charge