கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்

பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.

ஆனாலும், தனது முயற்சியில் மனம் தளராத முதலமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய உருளைகிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு தற்போது ஒரு கடிதத்தை எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

70 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட அந்த ஆய்வு மையத்தில் தமிழகம் மட்டுமின்றி தென்மாநில விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். நோய் தாக்குதலுக்கு இலக்காகாத உருளைகிழங்கு விதைகளை உருவாக்கும் இந்த மையத்தை மூட மத்திய விவசாயத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த மையம் மூடப்பட்டால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வு மையத்தை தென்மாநில விவசாயிகள் நாட வேண்டியது இருக்கும் , ஜலந்தர் ஆய்வு மையம் உருவாக்கும் உருளைக்கிழங்கு ரகம் தென் மாநிலங்களுக்கு ஏற்றதல்ல.

இதனால் நீலகிரி ஆய்வு மையத்தை மூடும் முடிவைக் கைவிட விவசாயத்துறை அமைச்சக்கத்தை பிரதமர் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்திற்காவது பிரதமரிடம் இருந்து ஏதாவது பிரதிபலிப்பு இருக்கிறதா என்று பார்ப்போம்.