எச்சரிக்கும் அழிவுகள் : ம.செந்தமிழன்

From Facebook: புயல் மற்றும் மழையின் சார்பாக எழுதப்பட்டது! ம.செந்தமிழன்

____________________________________________

மனித உடலின் முக்கால் பங்கு நீரால் ஆனது. பூமியின் முக்கால் பங்கும் நீரால் ஆனது. அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் இருக்கிறது / இருக்கும் என்பது ஆசான் திருமூலர் வாக்கு. உடலில் கழிவு சேர்ந்தால் அக்கழிவுகளை வெளியேற்றும் பூதங்கள் காற்றும் நீரும்தான். உடலில் காற்றின் வேகமும் அளவும் அதிகமாக இருந்தால் இரத்த நாளங்களில் அடைப்பை உருவாக்கும். உடலில் வலியும் சோர்வும் பதட்டமும் ஏற்படும். காற்றின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கையில் இதயம் வலிக்கும், மூச்சு விடுவது கடினமாகும், படபடப்பும் திணறலும் உருவாகும். காற்று எப்போதும் நீரில் வினை புரியும். காற்று கொதித்தால் நீரும் கொதிக்கும். இதயத்தில் காற்று சுழன்றால், இரத்த நாளங்களின் மண்டலம் முழுவதும் கொதிக்கும். இரத்தமும் நீர் எனும் பூதத்தின் வடிவம்தான். உடலெங்கும் ஓடும் இரத்தம் கொதிக்கும்போது, அந்த மனிதரின் மனதுக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். அது, ‘அமைதி’ எனும் மருந்து. அமைதி இழந்த மனம், உடலில் காற்றை அதிகரிக்கும். பதட்டமடைந்தவர்களின் உடலின் வாய் வழியாகவும் மலத்துளை வழியாகவும் காற்று வெளியேறிக் கொண்டே இருக்கும். பதட்டத்தையும் கடந்து பயம் மேலிட்டால், சிறுநீர் கசியும். காற்றும் நீரும் இணைந்து சீறும் பூதங்கள். காற்றின் தீவிரம் நீரைக் கொதிக்கச் செய்யும், நீரின் கொதிப்பு நிலத்தை மூழ்கச் செய்யும். உடலே நிலம்தான். உடல் எனும் நிலத்தில் நீர் அமைதியாக இருந்தால், மனிதர்களின் இயக்கம் சீராக அமையும். உடல் எனும் நிலத்தில் நீர் கொதித்தால் இயக்கம் தடுக்கப்படும். இறுதியில் நிலத்தை நீர் விழுங்கிவிடும்.aerial view of chennai floodz. உடல் எனும் நிலத்தை நீர் விழுங்கும்போது வியர்வையும், சிறுநீரும் வெளியேறும், வாய் வழியாக கோழையும் சளியும் வாந்தியும் வெளியேறும், மலத்துளை வழியாக மலம் நீர்த்துப் போகும். இவையெல்லாம் தொடர்ந்து நிகழும்போது, ஆண்களுக்கு விந்து, பெண்களுக்கு யோனிநீர் வெளியேறும். அது உயிர் பிரிதலின் இறுதிநிலை. நீர் நிலத்தை விழுங்கிவிட்ட நிலை. இந்த உடலில் இதுவரை வாழ்ந்த மனிதரின் உயிர் இப்போது இல்லை. ஆனால், இதே உடலில் பலகோடி நுண்ணுயிர்கள் பெருகத் துவங்கும். அவை எல்லாம் நீர் உடல் கொண்டவையாக இருக்கும். அதாவது நீர்த்தன்மை மிகுந்த புழுக்களும் நுண்ணுயிர்களும் சடலத்தில் தோன்றும். நிலத்தை நீர் சிதைக்கும் நிலை இது. ஒரு நிலத்தில் தொடர்ந்து புயல் வீசினால், அந்த நிலம் தனது அமைதியை இழந்துவிட்டது எனப் பொருள். நிலத்தின் அமைதி, அந்த நிலத்தில் வாழும் உயிர்களின் அமைதியுடன் நேரடியாகத் தொடர்புடையது. எந்த நிலத்தில் தவளைகளால் வாழ முடியாமல் போகிறதோ, எந்த நிலத்தில் செடிகளும் மரங்களும் பிடுங்கி வீசப்படுகின்றனவோ, எந்த நிலம் பல்லாயிரம் அடிகளுக்குத் தோண்டப்படுகின்றதோ, எந்த நிலத்தில் பட்டாம்பூச்சிகள் வாழும் தோட்டங்கள் அழிக்கப்படுகின்றனவோ, எந்த நிலத்தின் சாலைகளில் பாம்புகள் வாகனச் சக்கரங்களில் சிக்கிச் சிதைகின்றனவோ, எங்கு பசுக்களின் கழுத்தில் ஊசி செருகப்பட்டு, மடிக்காம்புகளின் வழியே பால் உறிஞ்சப்படுகிறதோ, எங்கு எருமைகளும் பன்றிகளும் ஊறித் திளைத்த குளங்கள் மனிதக் கழிவுகளின் சாக்கடையாக மாற்றப்பட்டதோ, எந்த நிலத்தில் ஏழைகளின் வாழ்விடமாக கழிவு ஓடைக் கரைகள் மாற்றப்பட்டனவோ, எந்த நிலத்தில் பெண்களின் உழைப்பும் சுதந்திரமும் சுரண்டப்படுகின்றனவோ, எந்த நிலம் சிறுவர்களின் இன்பங்களைக் கல்வியின் பேரால் பறித்துக் கொண்டதோ, எந்த நிலத்தில் பொருளாதாரம் எனும் இராட்டினத்தில் ஆண்களின் நிம்மதி பிணைக்கப்பட்டதோ, எந்த நிலம் பிறப்பின் பேரால் அடித்துக்கொள்ளும் மனிதர்களைத் தாங்குகிறதோ, எந்த நிலம் போலிப் பெருமைகளின் களமாக உள்ளதோ, எந்த நிலம் தனது மரபுகளை வீசி எறிந்ததோ அந்த நிலம் அமைதியை இழந்துவிட்டது எனப் பொருளாகும். இங்கே புயல் வீசும், நீர் பொங்கும், நிலம் சிதையும். வாழத் தகுதி கொண்டவர்கள் இந்த நிலையிலாவது தம்மை மறுபரிசீலனை செய்வார்கள். அந்தத் தகுதி இல்லாதோர் இப்போதும் புயலை முன்கூட்டியே கணிக்கவும், வந்தால் தடுக்கவும் ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நம்புவார்கள். இந்த பூமி நிறைய சமூகங்களைப் பார்த்துவிட்டது. இப்போது வீசும் காற்றுக்கும் இப்போது பொங்கும் கடலுக்கும், ஊர்களை விழுங்கி ஓடும் மழை வெள்ளத்திற்கும் வயது பலகோடி ஆண்டுகள். இவற்றின் வயதுக்கும் அனுபவத்துக்கும் முன்னால் இந்த மனிதச் சமூகம் ஈசலைக்காட்டிலும் குறைந்த ஆயுள் கொண்ட அற்ப உயிர்கள். உங்களுக்கு அமைதி வேண்டுமானால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, இந்தச் சமூகத்தின் பிடியிலிருந்து தப்புவதுதான். இவர்களுடைய சடங்குகளும், மதிப்பீடுகளும் மன அமைதியின் சமாதியின் மீது எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள். இப்போது உங்கள் முன்னால் இருக்கும் கேள்வி, ‘நீங்கள் வாழப் போகிறீர்களா? பிழைத்திருக்கப் போகிறீர்களா?’ வாழ விரும்பினால் நவீனச் சமூகத்திடமிருந்து இதுவரை நீங்கள் கற்றவற்றை வீசி எறியுங்கள். உங்கள் மதிப்பு உங்கள் கல்வியிலும் பொருளாதார நிலையிலும் இல்லை. உங்கள் மதிப்பு உங்கள் வாழ்வின் அமைதியில் இருக்கிறது. இது போட்டிச் சமூகம் என்று கூறுபவர்களை விலக்கி வையுங்கள். அவர்கள் உங்களையும் தமக்கான போட்டியாளராக நினைக்கிறார்கள். உங்களுக்கு உறவுகள் தேவை, போட்டியாளர்கள் அல்ல. நீங்கள் வெற்றி பெறுவதற்காகப் பிறக்கவில்லை, வாழப் பிறந்தீர்கள். ஒருவேளை வாழ்க்கையைப் போட்டிக் களமாக நினைத்தால் அந்தப் போட்டியில் எப்போதும் காற்றும் நீரும்தான் வெற்றி பெறுகின்றன என்பதை மறவாதிருங்கள். உணவும் நீரும் அரிதாகக் கிடைக்கும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது. இப்போதே உணவு உற்பத்தி, பெரிய நிறுவனங்களின் பிடியில்தான் இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் குடிநீர் கிடைக்கும் என்ற நிலை நீக்கமற நிறைந்துகொண்டுள்ளது. பணத்தால் எதையும் வாங்கலாம் எனப் பேசுபவர்களை விலக்கி வையுங்கள்.அவர்கள் உங்களையும் வாங்க நினைக்கிறார்கள். உங்களுக்குப் பணம் தேவை, நிறுவனங்களுக்கு அடிமைகள் தேவை. இதுதான் இப்போதைய பொருளாதாரம். எளிமைதான் அமைதியின் தாயகம். வாழ்க்கையைச் சிறு தோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமான பொருட்களை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள், தேவைக்கு அதிமான ஆசைகளை மனதிலிருந்து வெளியேற்றுங்கள். பொருட்களை வாங்கிக் குவிக்காதிருங்கள். ஒரு துளி தங்கம் உங்களை வந்தடையும் முன் பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு நவீன கருவியும் எளிய உயிர்களின் வாழ்வாதரத்தைச் சிதைத்த பின்னர்தான் உங்களை வந்தடைகின்றது. உங்கள் பணமும் கல்வியும் உங்கள் அதிகாரமாக மாறிவிட்டது. இது சரி என நீங்கள் நம்பினால், உங்களை விட அதிகப் பணமும் கல்வியும் கொண்டோரின் ஆதிக்கத்திற்கு நீங்கள் அடிபணிந்துதான் தீர வேண்டும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் புயலும் வெள்ளமும் இணைந்து ஆடும் சதிராட்டத்திற்கும் நெய்வேலி சுரங்கங்களுக்கும் தொடர்புண்டு என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். கடலூர் தொழிற்சாலைகளுக்கும் அந்த மாவட்டத்தின் வெள்ள அழிவுகளுக்கும் உறவுண்டு என்பதை இப்போதாவது கவனித்துப் பாருங்கள். உடல் தனது கழிவுகளை வெளியேற்றும். பூமியும் தனது கழிவுகளை வெளியேற்றும். இப்போதெல்லாம் விவசாயம் செய்வதற்கான மழை பெய்வது குறைந்துவிட்டது. இந்தப் புயல் மழை, காடுகளை உருவாக்கும் தன்மைகொண்டது. சாலைகளுக்காகவும் ஆலைகளுக்காகவும் வெட்டப்பட்ட மரங்களின் ஏக்கம் இப்போது தணிக்கப்படுகின்றது. இது காடுகளுக்கான காலம். இந்தக் காலத்தில் வாழ வேண்டுமெனில், நீங்களும் காடாக மாற வேண்டும். காடு எளிமையானது, வலிமையானது. எதிர்வரும் காலம் இன்னும் பல சீற்றங்களைக் காட்ட இருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கை காற்றையும் கடலையும் சார்ந்ததே தவிர, கம்பெனிகளைச் சார்ந்ததல்ல என்பதைப் புரிந்துகொள்வோருக்கு அந்தச் சீற்றங்களால் துன்பம் நேராது. உடலையும் பூமியையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள் அவர்கள். இந்தக் கட்டுரை அவர்களுக்காக எழுதப்பட்டது.

காளை வதை அல்ல… பண்பாட்டு வதை:சு.வெங்கடேசன் சிறப்பு பேட்டி

அரசியல் பேசுவோம் – 1 : செம்பரிதி  (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

Recent Posts