ஈசலென வீழ்ந்ததேன் – 2 : செம்பரிதி (தேர்தல் முடிவு குறித்த அரசியல் பகுப்பாய்வுக் குறுந்தொடர்)

 

Esalen vezhntha kathai – 2

 

__________________________________________________________________________________________________________

 

tha.pandiyanதமிழ்ச் சமூகத்தை, அரசியல் உள்ளீடற்ற தக்கையாக நீர்த்துப் போகச் செய்ததில், திராவிட இயக்கம் எனத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும், திமுகவுக்கும், அரசியல் மாற்றத்துக்காக 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருங்குரலெடுத்துப் பேசிய இடதுசாரிகளுக்கும் கணிசமான பங்கிருக்கிறது என கடந்த கட்டுரையின் இறுதிப்பகுதியில் பார்த்தோம்.

 

“இடதுசாரிகள் என்னய்யா செய்தார்கள்…? அவர்கள் பாவம்…” என்பதுதான் யதார்த்தமாக பலரது மனதிலும் எழும் குரலாக இருக்கும். அவர்கள் பாவம் என்ற அரசியல் கழிவிரக்கத்தை உதறிவிட்டு, இடதுசாரிகள் இதுவரை கடந்த வந்த அரசியல் வியூகப் பாதைகளைப் பார்த்தால் ஒரு சமூகத்தின் அரசியலகற்றத்திற்கு அவர்கள் எந்த அளவுக்கு துணை போயிருக்கிறார்கள் என்பது புரியும்.

 

தமிழகத்தில் சமதர்மம் என்ற கருத்தையும், சொல்லாடலையும் வெகுமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை பெரியாரையே சாரும். 1933ம் ஆண்டு மே 14ம் தேதி, குடியரசு ஏடு மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேதினத்தைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் கூறும் கருத்துகளைக் கவனியுங்கள்..

 

1933-வருடம் மே மாதம் 21-தேதி ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதையோரால்  தமிழ்நாடு முழுமையும் கொண்டாடப்படும்.

 

உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள்.  தாழத்தப் பட்டவர்களுக்கும்,ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந்நாள் வொன்றே உவந்த  தினமாகும். இந்நாளில் கோடான கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும்,குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது.இவ்வருஷம் ‘மே‘ தினமாகிய சென்ற திங்களில் (1933, மே,) ஆங்கில நாட்டிலும், பிரான்சிலும், ருஷ்யாவிலும் (சுரளளயை) ஜெர்மனி , இட்டலி , அமரிக்காவிலும், இந்தியாவிலும், ஜப்பானிலும், மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில்கோடான கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர்.  இந்தவருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளை தொழிலாளர் விடுமுறை நாளாகக் கொண்டாடியது. சமதர்ம நாடாகிய சோவியத் ருஷியாவில் 16 கோடி ஆண், பெண் குழந்தைகள் அடங்கலாக யாவரும், ருஷியா தேச முழுமையும், இத் தினத்தைக் கொண்டாடினார்கள்.  சமதர்மிகளாகிய நாமும் இத்தினத்தைக் கவனிக்கா மலிருப்பது பெருங்குறைவேயாகும்.  இம்மாதம் முதல் நாள் கடந்து விட்ட போதிலும்,  வருகிற ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 21 தேதி சுயமரியாதை சமதர்ம சபைகள் யாவும், சமதர்மகொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங் கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும், அந்தந்தக்கிராமங்களிலும், பட்டணங் களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம்.  ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்மம் இன்னதென்றும்,தொழிலாளருக் கும் விவசாயிகளுக்கும் விளக்கமுறச்செய்யலாம்.  துர்ப்பழக்க வொழுக்கங் களை வொழிக்குமாறு பல தீர்மானங்களைச் செய்யலாம்.  இவ்விதமாக ஒழுங்காகவும், நியாய முறைப்படி கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

 

 

 ஈ. வெ. ராமசாமி

குடி அரசு – அறிக்கை – 14.05.1933”

 

இத்தகைய அழுத்தமான இடதுசாரிப் பண்புகளைக் கொண்ட திராவிட இயக்கத்தை ஆதரிப்பதற்கு மாறாக, கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிர்முனையிலேயே பெரும்பான்மையான தருணங்களில் நின்றிருக்கிறார்கள். குறிப்பாக திமுகவின் தொடக்க காலங்களில் அக்கட்சியையும், அதன் தலைவர்களையும் கே.பாலதண்டாயுதம் போன்ற பழம் பெரும் இடதுசாரித் தலைவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர். ஆனால், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவாவுக்கு சிலை வைப்பது தொடர்பாக எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்த பின்னர் பாலதண்டாயுதத்தின் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. அதற்கு பின்னர் எம்ஜிஆரின் பண்பு நலன்களை வியந்து பேசும் அளவுக்கு அவர் மனமாற்றத்தை அடைகிறார். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிய பிறகு “எம்.ஜி.ஆர் மீது ஒரு துரும்பு பட்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என கம்யூனிஸ்டுகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்” எனப் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர் மீதான பாசம் ஒரு கட்டத்தில் கருணாநிதி எதிர்ப்பாக பரிமாணம் அடைகிறது. இது பாலதண்டாயுதத்தின் மனமாற்றம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த கம்யூனிஸ்டுகளின் உளவியல் மாற்றத்தின் அரசியல் அறிகுறி என்றே சொல்லலாம்.

 

கருணாநிதியை எதிர்ப்பதற்கு அவர்களுக்கு ஆயிரம் அரசியல் காரணங்கள் இருக்கலாம். அதற்கு குறைந்த பட்சம் பொது உடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட எம்.ஜி.ஆரை தங்களவராக்கிக் கொண்டு அந்த வேலையைச் செய்திருந்தால் தமிழகத்தின் அரசியல் களம் வேறுமாதிரி அமைந்திருப்பதற்கான வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால், அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்குவதற்கு உதவி, அதற்கு ஆதரவாக களமாடுவதையே ஏறத்தாழ 45 ஆண்டுகால அரசியலாக இடதுசாரிகள் நடத்தி வருகிறார்கள். தேர்தல் தேவைகளுக்கான பின்னாளில் அணி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், திமுக மீதும், கருணாநிதி மீதும் அவர்களுக்கு எப்போதுமே இயல்பான நேய உணர்வு இருந்ததுமில்லை. இருப்பதுமில்லை.

 

அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக மக்கள் கூட்டணி அமைத்துப் போராடியதாகக் கூறி வரும் நிலையில், தற்போது வாழ்பவர்களில் மிகவும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், ஜெயலலிதாவின் பதவியேற்பு வைபவத்தில் முன்வரிசையில் அமர வைக்கப்பட்ட காட்சியே இடதுசாரிகளின் அரசியல் பிறழ்வுகள் அனைத்திற்கும் சமகால உதாரணம்.

 

(ஈசலென வீழ்ந்த கதை தொடரும்)

 

______________________________________________________________________________________________________

சாதி ஒழிப்பு என்பது….. : திருமாவளவன்

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

Recent Posts