முக்கிய செய்திகள்

ஈசலென வீழ்ந்ததேன் – 3 : செம்பரிதி (சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த குறுந்தொடர்)

 

Esalena veezhnthathen-3

 

_______________________________________________________________________________________________________

 

vijayakanth-vasan-makkalnalakootaniதேசிய அளவிலான கட்சிகளில், இடதுசாரிக் கட்சிகள்தான் தொழிற்சங்க ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வலிமையான உள்கட்டமைப்பைக் கொண்டவை. அப்படி இருந்தும் அவர்களால் தங்களது வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்ள முடியாமல் போனது ஏன்? மக்களுக்கு புரிகிற மொழியில் அவர்கள் பேசுவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. (இங்கே மொழி எனக் குறிப்பிடப்படுவது, இந்தியையோ, தமிழையோ அல்ல. அவர்கள் எந்த மொழியில் பேசினாலும் மக்களுக்கு அந்நியமான ஒரு பாணியைப் பின்பற்றுவதையே அவ்வாறு கூறுகிறார்கள்.) ஆனால், அதைவிட முக்கியமான காரணம், தேர்தல் அரசியலுக்காக அவ்வப்போது அவர்கள் முன்னெடுக்கும் பலவீனமான நிலைப்பாடுகளே, வாக்குவங்கி சரிவதற்கு முக்கியமான காரணம்.

 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, ஊழல், குடும்ப ஆட்சி, மது ஆகியவற்றுக்கு எதிரான மாற்று அரசியலை முன்னிறுத்தியே இடதுசாரிகள் களமிறங்கினார்கள். அதில் தவறில்லை. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தார்களே ஒரு கூட்டணித் தலைமை, அங்கேதான் சரிந்து போனார்கள்.  

 

விஜயகாந்த் என்ற தனிமனிதர் மீது நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் ஒரு கூட்டணியின் தலைவராகவும், முதலமைச்சரின் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்படும் போது, அது சமூகப் பிரச்னையாகி விடுகிறது. திமுகவை வீழ்த்துவதற்கு ஒரு காலத்தில் எம்ஜிஆர் என்ற வசீகர அரசியலைக் கையிலெடுத்த இடதுசாரிகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு அதை விட மோசமான, எம்ஜிஆர் அளவுக்குக் கூட குறைந்த பட்ச அரசியல் பொறுப்புணர்வு (Political Commitment) இல்லாத விஜயகாந்த் என்ற வினோத வடிவத்தைக் கையிலெடுத்ததுதான் வேதனைக்குரியது. அப்படி என்றால் இந்தத் தமிழ்ச் சமூகத்தை என்ன செய்வதாக இடதுசாரிகளுக்கு உத்தேசம் என்ற கேள்வி நமக்கு எழுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

 

ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் வீழ்த்தி விட்டு, அந்த இடத்தில் நல்லகண்ணுவை அமர வைப்போம் என்று இவர்கள் முழங்கி இருந்தால், அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு மாறாக விஜயகாந்தை அமர வைப்போம் என்று முழங்கினால்….?

 

ஜெயலலிதா, சசிகலா, கருணாநிதி, ஸ்டாலின் போன்ற பெயர்களுக்கு பதிலாக விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் என்ற பெயர்கள் ஆட்சி அதிகாரப்பரப்பில் மாற்றி உச்சரிக்கப்படும். அவ்வளவுதானே. முன்னைவிட மோசமான சுரண்டல்களும், ஊழல் கூத்துகளும், கோட்பாட்டுக் குழப்பங்களும் அரங்கேறும். விஜயகாந்தை முதலமைச்சராக்குவதன் மூலம் இவற்றைத் தவிர வேறு எத்தகைய மாற்றத்தை சாதித்து விட முடியும் என நம்புகிறார்கள். குறைந்த பட்சம் மக்கள்நலக் கூட்டணி சார்பில் திருமாவளவனை முதலமைச்சராக்குவோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இருந்தாலாவது, மாற்றத்துக்கான முன்னெடுப்பு என்ற அடையாளத்தையேனும் பெற முடிந்திருக்கும். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா கழற்றிவிட்ட கடைசி நேரத்தில் தனியாக நிற்க முடிவெடுத்து, தேர்தல் களத்தைச் சந்தித்த இடதுசாரிகள், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சரியான களமும், காரணமும் இருந்தும் அந்த முடிவை ஏன் எடுக்கவில்லை?

 

ஒருபக்கம் விஜயகாந்தையும், மற்றொரு பக்கம் வைகோவையும் நம்பி இவர்கள் களமிறங்கினார்கள். இருவரிடமும் இவர்கள் பார்த்த ஒரே தகுதி “கருணாநிதி எதிர்ப்பு” என்பது மட்டும்தான். ஜெயலலிதாவை இவர்கள் எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள், அவ்வளவுதான்.

 

வைகோ எப்படிப் பட்டவர்?

 

1993இல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கினார். மிகப்பெரிய எழுச்சியும், ஆதரவும் அவருக்கு அப்போது கிட்டியது. ஆனாலும், அரசியலில் அவர் அடுத்தடுத்து எடுத்த முடிவுகள், மதிமுகவை சரிவை நோக்கியே தள்ளி விட்டன. 2001ல் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வைகோ, சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் திமுக தலைவர் கருணாநிதியுடன் நட்பு பாராட்டினார். 2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய கடைசி நேரத்தில், திடீரென அதிமுக அணியில் சேர்ந்து விட்டார். பணம் வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் சேர்ந்ததற்கான சரியான காரணத்தை அவரால் கூற முடியவில்லை. ஓரிரு இடங்கள் கூடுதலாகக் கிடைத்ததற்காக என்று அவர் தரப்பில் கூறப்பட்ட காரணத்தை யாரும் நம்பவில்லை. 2011 தேர்தலிலும் அவர் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தாரே தவிர, களமாடுவதற்கான வழிவகைகளைக் கண்டடையத் தவறிவிட்டார். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எடுத்த நிலைப்பாடு, திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராக அவர் கடந்து வந்த அரை நூற்றாண்டு அரசியலையே கேலிக் கூத்தாக்கி விட்டது. “எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுது” என தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஏதோ ஆவேசம் வந்தவர் போல் அந்தத் தேர்தலில் அவர் முழங்கித் தீர்த்தார். இப்போது ஆர்எஸ்எஸ்சின் வேலைத் திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டி அறிக்கைவிடும் வைகோவுக்கு, அப்போது “மோடி அலை” வீசுவதாக முழங்குவதில் எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. இந்த வைகோ யார் என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் 2014 தேர்தலின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. மோடிகளை விழுந்து விழுந்து ஆதரிக்கவா அரைநூற்றாண்டு காலம் இத்தனை உக்கிரமான அரசியலை இவர் முன்னெடுத்து வந்தார் என, மதச்சார்பற்ற சிந்தனையில் ஊறிய மனங்களில் எழுந்த கேள்விக்கு வைகோவிடம் எந்தப் பதிலும் இல்லை.

 

இவற்றையெல்லாம் சாதாரணமாக ஆக்கி விடும் அளவுக்கான அடுத்த அரசியல் கழைக் கூத்தை, 2016 சட்டமன்றத் தேர்தலில் அவர் ஆடத் தொடங்கியதுதான், வீழ்ச்சியின் இறுதிக் கட்டம்.

 

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே மக்கள்நலக் கூட்டணியை கட்டி எழுப்பி, ஒருங்கிணைத்துச் சென்றார். இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக வைகோ அறிவிக்கப்படுவார், இல்லை இல்லை திருமாவளவனை அறிவிப்பார்கள்.. ம்ஹூம் அப்பழுக்கற்க அரசியல் தலைவர் நல்லகண்ணுவைத்தான் அறிவிப்பார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த மூன்று பெயர்களை முதலமைச்சர் வேட்பாளர்கள் என்று முன்வைத்துப் பேசப்பட்ட போதெல்லாம், ஏதோ ஒரு வகையில் மக்கள்நலக் கூட்டணிக்கு நன்மதிப்பு கூடவே செய்தது. வைகோ இதுவரை எந்தப் பதவியிலும் அமர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகதவர்… திருமாவளவன் அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும், சிந்தனையும் கொண்ட, தலித் சமூகத்தில் இருந்து வளர்ந்து வரும் வலிமையான தலைவர்… தோழர் நல்லகண்ணு அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு உதாரணமாகத் திகழ்பவர்… என இந்த மூன்று பேர் மீதும், மக்கள் மதிப்பு வைப்பதற்கான நேர்மறைக் காரணங்கள் நிறையவே இருந்தன.

 

இத்தனை கனவுகளையும் “கேப்டன் விஜயகாந்த்” தான் எங்களது முதலமைச்சர் வேட்பாளர் என்ற ஒரே அறிவிப்பில் கலைத்தெறிந்து விட்டார். இதற்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் இடதுசாரித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். பெரியாரையும், அண்ணாவையும் போற்றிப் பேசிய வாயால், கேப்டன் விஜயகாந்த் என்று எந்தச் சங்கடமும் இல்லாமல் உச்சரிக்க வைகோவால் முடிந்தது. கூடுதல் குழப்பமாக “அய்யா மகன்” ஜி.கே.வாசன் வேறு.

 

இத்தனைக்கும் பிறகு மக்கள் தங்களை ஆதரிக்கவில்லை என்று வருத்தப்படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

 

விஜயகாந்த்தை திமுக கூட்டணியில் இடம்பெறாமல் தடுத்த ஒரே ஒரு சாதனையைத் தவிர, இந்தத் தேர்தலில், இடதுசாரிகளும், வைகோவும் வேறு எந்த மாற்றத்தையும் நிகழ்த்தி விடவுமில்லை. அதற்கான விதையைக் கூட அவர்கள் போட்டுவிடவுமில்லை.

 

அதிமுகவின் பி டீம் என்ற விமர்சனம் சற்று அதிகமானதுதான். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கான அடிப்படை நியாயங்கள் இவர்களிடம் எதுவும் இல்லையே!

 

விஜயகாந்தை முதலமைச்சராக்குவதா தமிழகத்தில் இவர்கள் சாதிக்க நினைக்கும் அரசியல் மாற்றம். அவரது எந்த அரசியல் கொள்கையைக் கண்டு இவர்கள் வியந்து, மயங்கி, விக்கித்து நின்று ஆதரித்தார்கள்.

 

ஆக, எம்ஜிஆரைப் போல மீண்டும் ஓரு சீரழிவு சக்தியை அரசியலுக்குள் வேரூன்ற வைத்து, தமிழ்ச் சமூகத்தின் குறைந்தபட்ச அரசியல் உயிர்ப்பைக் கூட துடிப்படங்கச் செய்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களது வேட்கையா?

 

கருணாநிதியை எதிர்க்கும் வேகத்தில், கடந்த அரைநூற்றாண்டு காலமாக இடதுசாரிகள் செய்து வரும் அரசியல் பிழைகளின் அதிகபட்ச வெளிப்பாடும் விளைவும்தான், 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறையும், அதற்குக் கிடைத்த முடிவுகளும் ஆகும்.

 

சரி.. இதில் திமுக செய்த தவறென்ன..?

 

(ஈசலென வீழ்ந்த கதை தொடரும்)   

 

_________________________________________________________________________________________________________