ஈசலென வீழ்ந்ததேன் – 4 : செம்பரிதி (சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த குறுந்தொடர்)

Esalena Veezhnthathen – 4

_____________________________________________________________________________________________________________

1984ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை இரு கட்சிகளிடமும் மாறி, மாறி ஒப்படைத்து வந்த தமிழக மக்கள், 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதற்கு மாறான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள். பணபலம்தான் இந்த்த தேர்தலைத் தீர்மானித்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்க முடியாது. இந்தி எதிர்ப்பு, மாநில உணர்வு, சமூகநீதி என விழுமிய உணர்வுகளை முன்வைத்து களமாட இடமளித்த மண் இது. இடஒதுக்கீடுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார் என்பதற்காக எம்ஜிஆரையே தூக்கியெறிந்த மக்கள் இவர்கள். பிராந்திய உணர்வை நசுக்கப்பார்த்த ஒரே காரணத்துக்காக காலத்துக்கும் எழ முடியாத மரண அடியை காங்கிரசுக்கு அளித்தவர்களும் தமிழக மக்கள்தான். அத்தகைய மக்கள் பணத்துக்காக வாக்களித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறுவதை, அரசியல் கூர்மை உள்ள விமர்சனமாக ஏற்க முடியாது. பணமும் இந்தத் தேர்தலில் ஓர் உந்துசக்தியாக இருந்திருக்கக் கூடும். அவ்வளவுதான். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான உளவியல் எழுச்சியே ஜனநாயகத்தில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரும் காரணியாகச் செயல்படுகிறது. அந்த உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, வேறு காரணங்களைத் தேடி அலைவது, கானல் நீரை மொண்டு குடிக்க முயன்ற கதையாகவே முடியும். பின்னர் ஏன் வாக்குக்காக கொடுக்கும் பணத்தை மக்கள் வாங்கிக் கொள்கிறார்கள் எனக் கேட்கலாம்.tn parties

 

தான் வாழ்வதற்காக எதையும் செய்யலாம் என்ற சமூக உளவியலைக் கட்டமைத்ததது ஏழை, எளிய மக்களோ, படிக்காத பாமரர்களோ அல்ல. வாக்குக்குப் பணம் வாங்குவதைக் கேவலமமாகப் பேசும் நடுத்தர, மேல்தட்டு நடுத்தர மற்றும் பணக்காரர்களாக இருக்கும் இந்த நாகரிக சிகாமணிகள்தாம் அத்தகைய, சுரண்டலுக்கு வாகான சமூக உளவியலையும், அமைப்பையும் கட்டமைத்தவர்கள்.

 

வாக்குக்காக பணம் வாங்குவதையும், கொடுப்பதையும் கேவலமாக பேசும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எத்தனை பேர், தங்களது சொந்த வாழ்க்கையில் நேர்மையாக இருக்கிறார்கள். தங்களுக்கு ஒரு குடிநீர்க் குழாய் இணைப்பு வேண்டும் என்றாலும் அதனை எத்தனை பெரிய தொகையை லஞ்சமாகக் கொடுத்து வாங்கவும் தயாராகத்தானே இருக்கிறார்கள். கிராம நிர்வாக அலுவலகம் தொடங்கி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை, போக்குவரத்துத் துறை என எங்கு போனாலும், தங்களது வேலை விரைவாக முடிய வேண்டும் என்பதற்காக எந்தத் தயக்கமும் இன்றி லஞ்சம் கொடுத்துவிட்டு வெளியில் வந்து நேர்மை குறித்து உரத்துப் பேசும் வாய்ச்சொல் வீரர்கள்தானே இவர்கள்! அரசியல்வாதிகள் மட்டும்தானா இந்த நாட்டில் சுரண்டல் மூலம் சொகுசாக வாழ்கிறார்கள். பெருந்தொழிலதிபர்கள் அனைவரும் நேர்மை தவறாமல் ரத்தம் சிந்தி, உழைத்துச் சம்பாதித்தா உல்லாச புரியில் திளைக்கிறார்கள். தனியார் நிறுவனங்களாகட்டும், அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகட்டும் அவர்களில் எத்தனை பேர் வாங்கும் சம்பளத்தை வைத்துக் கொண்டு நேர்மையான வாழ்க்கை நடத்துகிறார்கள். கிராமப்புறப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பலரும் கந்துவட்டிக்கு கொடுத்து வாங்கி, கொழிக்கும் செல்வந்தர்களாக வலம் வருவது குறித்து இங்கு யாருக்கும் தெரியாதா என்ன? கந்து வட்டிக்கு கொடுத்து வாங்கிப் பிழைக்கும் கயவர்கள், இந்த நாட்டில் ஆசிரியர்களாக இருப்பது எத்தனை பெரிய வெட்கக்கேடு? இப்படி, சமூகத்தின் மேலடுக்கில், எத்தகைய விளிம்புநிலை ஆபத்துகளையும் சந்திக்காமல், பத்திரமானதும், பாதுகாப்பானதுமான சொகுசு வாழ்க்கையில் சுகித்திக் கிடக்கும் இந்தக் கூட்டம்தான், லஞ்சத்துக்கு எதிராகவும், ஏழை மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டதாகவும் வெட்க உணர்வோ, அற உணர்வோ சிறிதுமின்றி கூச்சலிடுகிறது. பெருமுதலாளிகள், சிறு வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவரும் தங்களது சுக வாழ்வுக்காக இந்தச் சமூகத்தை எந்தச் சங்கடமுமின்றிச் சுரண்டிக் கொழுக்கும் போது, அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் ஏழைகள், அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தை வாங்குவது குறித்து நியாயம் பேசும் குரூரத்தை என்னவென்பது?

 

“கல்விக் கண் திறக்கும் கடவுளர்” எனப் போற்றப்படும் ஆசிரியர்கள் கந்து வட்டிக்குக் கொடுத்து வாங்குவதாலெல்லாம் ஜனநாயகத்துக்கு எந்தக் கேடும் வரப்போவதில்லை…

 

நர்சரி பள்ளிகள் முதல், கவைக்குதவாத பொறியியல் கல்லூரிகள் வரை கல்வியைக் கடைவிரித்து விற்பனை செய்து, தலைமுறை, தலைமுறையாக வாழும் அளவுக்கு சொத்துகளைக் குவித்து வைக்கக் கொள்ளையடிக்கும் கும்பலால் எல்லாம் ஜனநாயகத்துக்கு எந்தக் கேடும் வரப்போவதில்லை…

 

பில்லியன் டாலர் கணக்கில் சமூகத்தைச் சுரண்டிச் சம்பாதிக்கும் பெருமுதலாளிகள் அரசுகளையே தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு கேடு இல்லை…

 

சிறிய, அளவிலும், பெரிய அளவிலும் வணிகம் செய்து கோடி, கோடியாக சம்பாதிக்கும் பலரும் குறைந்த பட்ச வருவாயைக் கூட கணக்கில் காட்டி வரிக் கட்டாமல் ஏய்ப்பது ஜனநாயகத்துக்கு கேடு இல்லை…

 

அரசுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், அடித்தட்டு ஊழியர் வரை இன்றைக்கு எவ்வளவு கல்லாக் கட்டினோம் என்று லஞ்சப்பணத்தைக் கணக்குப் பார்த்த படியே வீடு திரும்புவதால் ஜனநாயகத்துக்கு எந்தக் கேடும் இல்லை…

 

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி கொள்ளை லாபத்திற்கு விற்பதற்காக கண்ணில் பட்ட இடங்களையெல்லாம் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வளைத்துப் போடும் கொலை பாதகச் செயலால் ஜனநாயகத்துக்கு எந்தக் கேடும் இல்லை….

 

தமிழகத்தின் இயற்கையான விதைகளையெல்லாம் அழிக்கும் வகையில் மரபணு மாற்றப்பயிர்களை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி, நமது மண்ணை மலடாக்கி, அதன் மைந்தர்களாம் விவசாயிகளை ஏதிலிகளாக்கி, தற்கொலையின் விளிம்புக்குத் தள்ளும் தறுதலைத் தனத்தாலெல்லாம் ஜனநாயகத்துக்கு எந்தக் கேடும் வந்துவிடப் போவதில்லை…

 

மல்லையாக்களுக்கு மில்லியன் டாலர் கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, நியாயமாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் அடிப்படைத் தேவைகளுக்காக கடன் கோரிப் போகும், கடைக்கோடி மக்களை, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக விரட்டியடிக்கும் வங்கியாளர்களால் எல்லாம் ஜனநாயகத்துக்கு எந்தக் கேடும் வந்துவிடாது….

 

இன்னும் இப்படி படித்த, பணக்கார நாகரிக உலகத்தைச் சேர்ந்த கயவர்கள் செய்யும் எத்தனையோ ஒயிட்காலர் கிரிமினல் தனங்களாலெல்லாம் ஜனநாயகத்துக்கு வராத கேடு,  அன்றாடம் அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடும் ஏதுமறியாத ஏழைகள் வாக்குக்காக அரசியல் கொள்ளையர்கள் அள்ளி வீசும் 50, 100ஐ வாங்கிக் கொள்வதால்தான் வந்து விடுகிறது என்கிறார்கள்.

 

வாக்குக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் நாம் நியாயப்படுத்த வரவில்லை. மற்ற எல்லாமும், எல்லோரும் சரியாக இருந்தால் ,இது தானாகவே சரியாகிவிடும் என்கிறோம்.

 

குளுகுளு அறைகளில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டு, படுக்கப் பழம்பாய் கூட இல்லாமல் தடுமாறும் ஏழைகளைப் பார்த்து நேர்மை கெட்டவர்கள் என்று விமர்சிப்பது வெட்கக்கேடானது இல்லையா?

 

இந்த சமூகத்தை இத்தனை வேறுபாடுகளுடனும், ஏற்றத்தாழ்வுகளுடனும் வைத்திருப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து முடித்தது, காசு, பணம், துட்டு என்று அலையும் இத்தகைய கயவர்கள்தானே!

 

வாக்குக்காக கொடுக்கும் பணத்தை சும்மாதானே வருகிறது என்று சில பணக்காரர்களே வாங்கிக் கொள்கிறார்களே அவர்களை எந்த ரகத்திலே சேர்ப்பது!

 

ஆக, இந்தத் தேர்தலில் அடையாளம் தெரியாமல் போன கட்சிகள் எல்லாம், வலிமையான கட்சிகள் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கியதால் மட்டுமே தங்களுக்கு இந்தத் தோல்வி நேர்ந்து விட்டது எனக் கூறுவது, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள உதவுமே தவிர, உண்மைக் காரணத்தை அறிய உதவாது.

 

மற்றொரு பக்கம், தமிழக மக்கள் புதிய அரசியல் சக்திகளை வரவேற்கத் தயங்குவதாகவும், திமுக, அதிமுகவைத் தவிர மற்ற கட்சிகளை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் பொதுத்தளத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

 

புதிய சக்திகள் யார்? அவர்கள் முன்வைத்த முழக்கங்கள் மீதும், முன்னிலைப் படுத்திய முகங்கள் மீதும் எப்படி நம்பிக்கை வரும்?

 

திடமான மாற்று அரசியலை இதுவரை யாரும் முன்வைக்காததே மக்களின் இத்தகைய மனப்போக்குக் காரணம்.

 

சாதி ஆணவக் கொலைகள் குறித்து மௌனம் சாதிக்கும் பாமகவின் அன்புமணியை அவரது மற்ற முழக்கங்களுக்காக நம்ப மக்கள் தயாராக இல்லை.

 

ஒடுக்கப்பட்ட  மக்களுக்கான அரசியலை  முன்னெடுத்து, காத்திரமான கருத்துகளைப் பேசியும், எழுதியும், போராடியும் வந்த திருமாவளவன், கேப்டன் விஜயகாந்த் வாழ்க என்று சொன்ன நிமிடத்திலேயே, மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்.

 

உன்னதமான தத்துவார்த்த வலிமையோடு, மாற்று சக்தியாக எழுந்து நிற்க வேண்டிய இடதுசாரிகளோ, இன்னும் விஜயகாந்துகளையே தேடி அலைகின்றனர்.

 

கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு பெரியாரில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சீமான், இப்போது என்ன பேசுகிறார் என்பது அவருக்கே புரியாமல் போனது. 

 

இப்படி, முன்வைக்கும் முழக்கத்திலும், அரசியலிலும் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு, மக்கள் தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என அவர்கள் மீது குற்றம் சொல்வது என்ன நியாயம்?

 

மாற்று என்பது மாற்றுக் குறையாததாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

 

அத்தகைய மாற்றாக ஓர் அரசியல் சக்தியை அடையாளம் காணும் போது, அதனை மாலைசூடி வரவேற்க மக்கள் தயாராகவே இருப்பார்கள் என்பதை மறுக்கவே முடியாது.

 

(வீழ்ந்த கதை தொடரும்)

______________________________________________________________________________________________________________