இன்றைய தலைமுறையில் எல்லோருமே படித்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்புடன் நிறுத்திவிடுவார்கள். டிகிரி போகிறவர்கள் மிகவும் குறைவு. பியூசி அல்லது பிளஸ் டூ படிப்புடன் பெண்களை நிறுத்திவிடுவார்கள்.
இன்று தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். அந்த மனநிலைதான் டோன்ட் கேர் என்று எதையும் அணுகுகிறார்கள். எதைப் பற்றியும் மரியாதையும் மதிப்பீடும் இருப்பதில்லை. ஏனோதானோ என்று கருதுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஆனால் அவர்கள் பின்னாளில் உணரக்கூடும்.
நாம் எந்த பின்னணியில் இருந்து வந்திருக்கிறோம், எந்த குடும்பத்தில் பிறந்திருக்கிறோம், நம் வருமானம் என்ன, நம்முடைய பலவீனங்கள் என்ன, பலங்கள் என்ன நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது, குறைகளை எப்படி போக்கலாம், நிறைகளை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்ற சிந்தனைகள் இருப்பதில்லை.
பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும்போது ஒரு பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலோ, அதில் நாட்டமில்லை என்றாலோ அதைக்கூட ஒப்புக்கொள்வதற்கு தயங்குகிறார்கள். அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. கடைசியில் தேர்வு நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருக்கிறார்கள். எல்லோராலும் கடைசி நேரத்தில் படித்து தேர்ச்சி பெறமுடியாது.
சிலருக்கு தேர்வுக்கு முந்தைய நாட்களில் படித்தால் எளிதாக இருக்கும். அதையே மற்றவர்களும் பின்பற்றமுடியாது. சின்ன சிரமங்களைக்கூட தாங்குவதில்லை. டீச்சர் திட்டினார், அம்மா திட்டினார் என தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனம் பலவீனமாக இருக்கிறது. சவலைப்பிள்ளைகளாக வளர்கிறார்கள்.
சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது என்று எழுத்தாளர் சிவசங்கரி ஒரு நூலை எழுதியிருப்பார். அப்படித்தான் நம் இளைய தலைமுறையை சின்ன நூல்கண்டுகள் போன்ற பிரச்சினைகள் கவ்விப்பிடித்திருக்கின்றன. மனமும் ஒரு எந்திரத்தைப் போன்றதுதான். அவ்வப்போது ரிப்பேர் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.
எது நிரந்தரமானது, எது தற்காலிகமானது என்ற புரிதல் இல்லை. இங்கேதான் நட்பின் வட்டம் வருகிறது. நான்கைந்து பேர்கள் இருக்கிற நட்புவட்டத்தில் ஒருவன் மட்டும் வழிதவறுகிறபோது., இடித்துரைக்கும் நண்பர்கள் வேண்டும். டோன்ட் கேர் மனநிலை ஒருவருக்கு மட்டும் இருந்தார். அதை மற்றவர்கள் மாற்றவேண்டும். நட்பையே டைம் பாஸூக்காக வைத்திருக்கிறார்கள். இடிப்பாரே இல்லாத ஏமரா மன்னன் என்பாரே வள்ளுவர் நினைவிருக்கிறதா. சக நண்பர்கள் பற்றிய அக்கறை இருப்பதில்லை. எப்படி போனால் நமக்கென்ன என்று நினைக்கிற போக்குதான் அதிகம். அந்தக் காலத்தில் அப்படியில்லை என்பது உண்மைதானே.
கூட்டுக்குடும்ப முறை இருந்தபோது, அண்ணனிடம் சொல்லலாம். அக்காவிடம் சொல்லலாம். பாட்டியிடம் சொல்லலாம். அத்தையிடம் சொல்லாம். தம்பியிடம் சொல்லலாம். சொந்தங்கள் பிளவுபட்டுள்ளன. இப்போது அக்கா, தங்கைகளுக்குள்ளேயே ஒற்றுமை இருப்பதில்லை. மனம் விட்டுப் பேசிக்கொள்வதில்லை. பொருளாதாரக் கணக்கில் வாழ்க்கை நகர்கிறது.
எது உண்மையானது என்று புரியவில்லை. எல்லாவற்றையும் புகாராக மாற்றிவிடுகிறார்கள். பொருளாதார சுதந்தரமும் வாழ்க்கையில் எதையும் செய்யும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறோம்?
தொடரும்…