பேஸ்புக் நிறுவன கணக்கு வைத்துள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை திரட்டப்படுவதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
இந்தியாவில் வங்கி கணக்கு, அரசு மானிய திட்டங்கள் என பலவற்றிக்கும் ஆதார் இணைப்பு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியம் என நேற்று சமூகவலைதளங்களில் தகவல் பரவி வைரலானது. பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்குவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் கேட்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை பேஸ்புக் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் இன்று வியாழன்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘‘இந்தியாவில் பேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளது போன்று தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு தான் கோரினோம். மற்றபடி ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் எதையும் நாங்கள் கேட்கவில்லை. பேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடங்க விரும்புவர்களின் பெயரை சரியான முறையில் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் புரிந்து கொண்டு தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் தான், கேட்கப்பட்டது.
சோதனை அடிப்படையில், புதிதாக பேஸ்புக் கணக்கு தொடங்க விரும்புவர்களுக்கு மட்டும் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதுவும் இதனை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, பேஸ்புக் ஆதார் தகவல்களை திரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிறிதும் உண்மையில்லை’’ என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 21.7 கோடி பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். விரைவில் அமெரிக்காவை விடவும், இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.