முக்கிய செய்திகள்

புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..

திருநெல்வேலி நகரில் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பத்திர தீபத்திருவிழா நடைபெறும்.

6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்சத்தீப திருவிழாவும் நடைபெற்று வருகிறது. 6 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த 13-ந் தேதி லட்சத்தீப திருவிழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நேற்று இரவு 7 மணிக்கு சுவாமி கோவில் மணிமண்டபத்தில் ஒரு தங்க விளக்கிலும், 2 வெள்ளி விளக்கிலும் தீபம் ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த விளக்குகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த தங்க விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு வரை தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும். இன்று மாலை 6.30 மணி அளவில் சுவாமி கோவிலில் உள்ள உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் கோவில் உள் சன்னதி, வெளிபிரகாரங்கள் ஆகிய இடங்களில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டது..

இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சுற்றி பின்னர் இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் ரத வீதிகளில் வீதி உலா வருதல் நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு ஆறுமுக நயினார் வெளிப்பிரகாரத்தில் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.