மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, இந்த 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதற்கிடையே, இந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில், 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போன மாநில அரசை கண்டித்தும் செப்டம்பர் 28ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள், ஒன்றியங்கள் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார். முன்னதாக, அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்தார்.
இதனைபோல், சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் வள்ளூவர் கோட்டம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன் பங்கேற்றார். இதில் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் கொருக்குபேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். இதில் திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்-இரா.முத்தரசன், திருச்சி-கே.எம்.காதர் மொய்தீன், கடலூர்-திருமாவளவன் எம்.பி, தாம்பரம்- எம்.எச்.ஜவாஹிருல்லா, கோவை-ஈ.ஆர். ஈஸ்வரன், பெரம்பலூர்- ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.