டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இன்று (ஜன.,20) 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கோரியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப்பகுதிகளில் கடந்த நவ.,26ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் விவசாயிகள் தங்களின் கொள்கைகளில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்து வருகின்றனர்.
எந்த சுமூக முடிவும் எடுக்கப்படாததால், இன்று (ஜன.,20) மத்திய அரசு – விவசாய சங்கங்கள் 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
இது குறித்து காங்., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
விவசாயிகளும் மத்திய அரசும் இன்று 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. கடந்த காலத்தை ஒதுக்கிவைத்துவிட்டு புதிதாக ஒன்றைத் தொடங்க மத்திய அரசு மறுக்கும்போது நாம் அவர்களிடம் எவ்வாறு நேர்மறையான பதிலை எதிர்பார்க்க முடியும்?
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் புதிதாக ஒரு பேச்சுவார்தையைத் தொடங்கவேண்டும். அரசு முன்வந்து விவசாயிகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அரசு முன்னோக்கிச் செல்லும் வழி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.