விவசாய நலனுக்கும் விவசாயிகள் நலனுக்குமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் தானியங்களுக்கு, உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை; லட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கென்றே நாடாளுமன்றத்தின் 21 நாள் சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் திரண்ட விவசாயிகள் வியாழனன்று பேரணி நடத்தினர். 2-ம் நாளான வெள்ளிக்கிழமையன்று பிரம்மாண்ட பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றனர்.புதுதில்லியில் அகில இந்திய விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு தலைமையில் 207 சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணியில் விவசாயத்தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், சமூகப் போராளிகள், மாணவர்கள் உட்பட பல்வேறு தன்னார்வலர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.பாஜக மோடி அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்றுவரை செயல்படுத்தவில்லை. காப்பாற்றவும் இல்லை என விவசாயிகள் அனைவரும் ஆவேசத்துடன் தில்லி சாலையில் முழக்கமிட்டுக் கொண்டே நடந்தனர். விவசாயிகள் பேரணியையொட்டி 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடன் வலையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கக்கோரும் சட்டமுன்வடிவு (Farmers’ Freedom from Indebtedness Bill,2018), விவசாய விளைபொருள்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயத்திட வகை செய்திடும்
018 ஆம் ஆண்டு வேளாண் பண்டங்கள் சட்டமுன்வடிவு (Agricultural Commodities Bill, 2018) ஆகிய இரண்டடையும் ஆதரித்திடும் அதே சமயத்தில், 1980ஆம்ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு 350 ரூபாயும், ஆண்டில் 250 நாட்களுக்கு வேலையும் வழங்க வேண்டும். 1989ஆம் ஆண்டு தலித்துகள்-பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைச்) சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். இப்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது. 2016ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம் மற்றும் 1976 ஆம் ஆண்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்புச்)சட்டம் ஆகியவற்றின் கீழ் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்களும் இப்பேரணியில் பங்கேற்றனர் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, பொதுச் செயலாளர் ஏ.விஜயராகவன் மற்றும் இணைச் செயலாளர் சுனீத் சோப்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இப்பேரணி குறித்து, அகில இந்திய விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கூறுகையில், தில்லியில் இதுவரை நடந்த போராட்டம், பேரணிகளிலேயே நவ.29,30 தேதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தில்லியில் சங்கமித்த இப்பேரணிதான் மிகப்பெரியதாகும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த பிரம்மாண்டமான தில்லிபேரணியில் பங்கேற்ற விவசாயிகளிடையே எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உரையா ற்றினர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா எம்.பி., தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று விவசாயிகளை வாழ்த்தி பேசினர்.