“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?”: மு.க.ஸ்டாலின் அறிக்கை

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்

– மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை…

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

அணை திறக்கும் போதே – “காவிரி கடைமடைப் பகுதிகளுக்கும் குறுவைச் சாகுபடிக்கு நீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்” என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக “பெயரளவில்” அறிவித்து – அதை மேற்பார்வையிட ஒரு “கமிட்டி”யை “பகட்டாக” அ.தி.மு.க. அரசு அமைத்ததே தவிர- உண்மையிலேயே தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவோ அல்லது முறைப்படி முழுமையாகத் தூர்வாரவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

கடைமடைக்குக் காவிரி நீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் கதறுவதை முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை; தனது பரிவாரங்களுடன் மேட்டூர் திறப்பைப் பெரிய விளம்பர வெளிச்சத்தில் செய்ததோடு சரி!

10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படுவதால்- காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் நனைவதற்கு மட்டுமே அந்த நீர் பயன்படுகிறது.

குறுவை விவசாயப் பணிகள் முழுமைக்கும் முறையாக நீர்ப்பாசனம் கிடைப்பதென்றால் குறைந்தபட்சம் தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீராவது திறந்துவிடப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் ஒருமனதான கோரிக்கையாக இருக்கிறது.

அதற்குத் தகுந்தாற்போல் கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெறுவதற்கு உரிய முயற்சிகளை முதலமைச்சர் இதுவரை மேற்கொள்ளவும் இல்லை.

திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. “கடைமடைப் பகுதிவரை நீர் செல்வதற்குச் சாளுவன் ஆற்றை உடனே தூர்வாருங்கள்” என்று கோரிக்கை விடுத்து- கோட்டூர் ஒன்றியத்தில் ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பி மட்டும் 9197 ஏக்கர் நிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றாமல் அலட்சியமாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது தாமதமாகத் துவங்கிய தூர்வாரும் பணிகளையும் முறைப்படி செய்யாமல், “கமிஷனுக்காகவே” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது!

விவசாயிகளுக்காக வழக்கம் போல் “பல அறிவிப்புகளை” அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருந்தாலும், அவை வெற்று காகித அறிவிப்புகளாகவே இருக்கின்றன. குறிப்பாக, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன் வழங்கப்படுவதில்லை.

அவர்களிடம் கடன் கேட்டுப் போகும் விவசாயிகளிடம் “எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை” என்று முகத்தில் அடிப்பதைப் போல் பதில் சொல்லித் திருப்பி அனுப்பும் அவலம் நடக்கிறது.

வேளாண்மை மையங்களில் உரங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் எதுவும் இருப்பு இல்லை என்றும், தங்களுக்கு வழங்கப்படும் விதை நெல் கூட தரமற்றதாக இருக்கிறது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆகவே, கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீரும் செல்லவில்லை; நீர் சென்ற பகுதிகளிலும் வேளாண்மை செய்வதற்குத் தேவையான கடனோ, விவசாய இடுபொருள்களோ கிடைக்கவில்லை.

ஜூன் 12-ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டும், காவிரி டெல்டா விவசாயிகள், அ.தி.மு.க. அரசின் மெத்தனத்தால் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; அதனால் வேதனைப்படுகிறார்கள்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் “விவசாயிகள் நீரேற்று சங்கம்” என்ற பெயரில் கிணறு வெட்டி- நீர்ப் பாசன வசதி செய்வதற்கு ஒரு விவசாயிக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை “மெகா” வசூல் செய்யப்படுவதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த வசூல் அரசின் சார்பில் நடக்கிறதா? அரசு மட்டத்தில் இல்லாமல் அமைச்சர் பெயரில் நடக்கிறதா? என்ற சர்ச்சை நாமக்கல் மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி டெல்டா விவசாயிகளாக இருந்தாலும் சரி – கொங்கு மண்டல விவசாயிகளாக இருந்தாலும் சரி- ஏன், தமிழக விவசாயிகள் அனைவருமே தொடர்ந்து துன்பத்திலும், துயரத்திலும் வாடுகிறார்கள். அவர்களது குறைகளைக் கேட்பதற்கு- அ.தி.மு.க. அரசும் தயாராக இல்லை; வேளாண்துறை அமைச்சருக்கும் நேரமில்லை!

விவசாயிகளின் வேதனைக்குரல்கள் இதுவரை முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டவில்லை என்றாலும்- தூர்வாரும் பணிகளைப் பார்வையிடக் காவிரி டெல்டாவிற்குச் செல்லும் நேரத்திலாவது- இந்த வேதனைக்குரல்கள் எட்டும் என்று நம்புகிறேன்.

அதிகாரிகளை அழைத்துப் பேசி- கடைமடைப் பகுதிக்கும் காவிரி நீர் செல்வதற்கு, தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும், விவசாயிகளுக்குத் தேவையான கடன் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து..

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்கு கடும் விதிமுறைகளுடன் மலேசியா அரசு அனுமதி;

Recent Posts