உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
உலக கோப்பை கால்பந்து தொடரில் மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ‘இ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, செர்பியாவை எதிர்கொண்டது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு குறைந்தது ‘டிரா’ செய்தாக வேண்டும் என்ற சூழலில் பிரேசில் வீரர்களும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் செர்பிய அணியினரும் மல்லுகட்டினர்.
நெய்மார், பிலிப் காட்டினோ, தியாகோ சில்வா உள்ளிட்ட பிரேசில் நட்சத்திர வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்தில் துறுதுறுவென வலம் வந்தனர். 4-வது நிமிடத்தில் நெய்மார் அடித்த ஷாட்டை செர்பிய கோல் கீப்பர் விளாடிமிர் ஸ்டோஜ்கோவிச் தடுத்தார். இதே போல் 28-வது நிமிடத்தில் நெய்மார் பந்துடன் வலையை நெருங்கிய போது தடுப்பாட்டக்காரர்கள் அவரது முயற்சியை முறியடித்தனர். அடுக்கடுக்கான கோல் வாய்ப்புகளை உருவாக்கி கொண்டே வந்த பிரேசில் 36-வது நிமிடத்தில் செர்பியாவுக்கு முதல் ‘செக்’ வைத்தது.
பிலிப் காட்டினோ கம்பத்தை நோக்கி அடித்த பந்தை சக வீரர் பவுலினோ தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அப்போது எதிரணி கோல் கீப்பர் கொஞ்சம் முன்னோக்கி வந்ததால் அவருக்கு மேலாக பவுலினோ பந்தை தூக்கி விட்டார். அது நேராக கோலுக்குள் உருண்டோடியது. இதனால் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. செர்பிய வீரர்களால் முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட்கூட அடிக்க முடியவில்லை.
பிற்பாதியில் செர்பிய வீரர்கள் வியூகங்களை மாற்றிக்கொண்டு தீவிரமான எதிர்தாக்குதலை தொடுத்தனர். 60-வது நிமிடத்தில் செர்பியா கோல் போட்டிருக்க வேண்டியது. ருகாவினா அடித்த பந்தை பிரேசில் கோல் கீப்பர் அலிஸ்சன் கையால்தட்டிவிட்டு தடுமாறி விழுந்தார். கையில் பட்டு தெறித்த பந்தை மற்றொரு செர்பியா வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலையால் முட்டினார். ஆனால் துரதிர்ஷ்டம், அருகில் நின்ற தியோகோ சில்வாவின் காலில் பந்து பட்டு பிரேசில் கோல் கீப்பர் அலிஸ்சன் வசம் சிக்கியது. சில்வா மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், அது வலைக்குள் பயணித்து இருக்கும். அடுத்த 3-வது நிமிடத்தில் மிட்ரோவிச் மீண்டும் ஒரு முறை பந்தை இலக்கை நோக்கி தலையால் பலமாக முட்டித்தள்ளினார். இந்த முறை அதை கோல் கீப்பர் அலிஸ்சன் கச்சிதமாக பிடித்தார்.
இந்த பரபரப்பான கட்டத்தில் பிரேசில் அணி 2-வது கோல் போட்டது. 68-வது
தியாகோ சில்வா தாவி குதித்து தலையால் முட்டி கோலாக்கினார். அந்த முன்னிலையை பிரேசில் கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.
நெய்மார் கோல் ஏதும் போடாவிட்டாலும் அதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கி தந்து ஹீரோவாக முத்திரை பதித்தார். இந்த ஆட்டத்தில் பந்தை அதிக முறை தொட்டவர் இவர் தான். அவரது காலை 119 முறை பந்து முத்தமிட்டு சென்று இருக்கிறது. இன்னொரு தருணத்தில் தனிநபராக நெய்மார் கோலை நோக்கி பந்துடன் மின்னல் வேகத்தில் ஓடிய போது கோல்தரிசனம் கொடுப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் செர்பிய கோல் கீப்பர் ஸ்டோஜ்கோவிச் சரியாக கணித்து தடுத்து விட்டார்.
முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை விரட்டியடித்து 2-வது சுற்றை எட்டியது. தனது பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில் (7 புள்ளி, 2 வெற்றி, ஒரு தோல்வி) அடுத்த சுற்றில் மெக்சிகோவை 2-ந்தேதி சந்திக்கிறது.
‘களத்தில் 90 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்குரிய தண்டனை (கோல்) கிடைத்து விடும். கால்பந்து உலகில் பலம் வாய்ந்த பிரேசில் போன்ற அணிகளுக்கு எதிராக, தடுப்பாட்டத்தை கைவிட்டு ‘ரிஸ்க்’ எடுத்து ஆடுவது என்பது மிகவும் கடினமாகும். தைரியமாக போராடிய எங்களது அணி வீரர்களை பாராட்டுகிறேன். அதே சமயம் நாங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பே கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பிரேசில் கணிக்கப்பட்டது. இப்போது ஜெர்மனி வெளியேறி விட்ட நிலையில், நிச்சயம் கோப்பையை வெல்ல பிரேசிலுக்கு அதிக வாய்ப்புள்ளது’.
* பிரேசில் அணி 1970-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 13-வது முறையாக முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறது.
* செர்பியா தனி நாடாக உருவான பிறகு உலக கோப்பையில் பங்கேற்ற 3 தொடர்களிலும் (2006, 2010, 2018) முதல் சுற்றுடனேயே வெளியேறி உள்ளது.
000
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடைசி லீக்கில் போலந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்ற ஜப்பான் அதிர்ஷ்டத்தின் பலனால் 2-வது சுற்றை எட்டியது. செனகலை வீழ்த்தி கொலம்பியாவும் அடுத்த சுற்றை உறுதிசெய்தது.
உலக கோப்பை கால்பந்து தொடரில் ‘எச்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் சமரா நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் செனகல் – கொலம்பியா அணிகள் சந்தித்தன. ‘டிரா’ கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் செனகலும், கட்டாயம் வென்றால் மட்டுமே அது சாத்தியம் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் கொலம்பியாவும் ஸ்டேடியத்தில் ஆக்ரோஷமாக விளையாடின.
17-வது நிமிடத்தில் செனகல் வீரர் சாடியோ மேனை, கொலம்பியா வீரர் டேவின்சன் சாஞ்சஸ் பிடித்து இழுத்ததால் செனகல் அணி பெனால்டி கேட்டு முறையிட்டது. இதையடுத்து போட்டி நடுவர், வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, அது பெனால்டி கொடுக்கும் அளவுக்கு ‘பவுல்’ இல்லை என்று கூறி விட்டார். 30-வது நிமிடத்தில் கொலம்பியாவுக்கு பின்னடைவாக காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வெளியேற நேரிட்டது. முதல் பாதியில் இரு அணி தரப்பிலும் கோல் ஏதும் போடவில்லை.
பிற்பாதியில் 74-வது நிமிடத்தில் கொலம்பியா கோல் போட்டது. கார்னர் பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை கொலம்பியா வீரர் எர்ரி மினா தலையால் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து செனகல் கோல் கீப்பர் காதிம் டியாயே கையில் பட்டு உள்ளே புகுந்து கோலாக மாறியது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆப்பிரிக்க அணியான செனகலை வீழ்த்தியது.
இதே பிரிவில் வால்கோகிராட் நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி, ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்துடன் கோதாவில் குதித்தது. இந்த ஆட்டத்திலும் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. போலந்து வீரர் கமில் குரோசிக்கி தலையால் முட்டி அடித்த பந்தை ஜப்பான் கோல் கீப்பர் கவாஷிமா அற்புதமாக பாய்ந்து தடுத்து நிறுத்தினார்.
பிற்பாதியில் ஆட்டம் மேலும் வேகமெடுத்தது. 59-நிமிடத்தில் போலந்து வீரர் ஜான் பெட்னாரெக் கோல் போட்டு தங்கள் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். பதிலடி கொடுக்க ஜப்பான் கடைசி நிமிடம் வரை போராடியும் பலன் இல்லை. முடிவில் போலந்து அணி 1-0 என்ற கோல கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது.
லீக் சுற்று முடிவில் ‘எச்’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் அணிகள் 2-வது சுற்றை எட்டின. செனகல் (4 புள்ளி), போலந்து (3 புள்ளி) அணிகள் வெளியேறின.
ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த செனகல், நைஜீரியா, துனிசியா, மொராக்கோ, எகிப்து ஆகிய 5 அணிகளும் இந்த முறை லீக் சுற்றை தாண்டவில்லை. 1986-ம் ஆண்டுக்கு பிறகு ‘ரவுண்ட் 16’ எனப்படும் நாக்-அவுட் சுற்றை எந்த ஆப்பிரிக்க அணியும் எட்டாதது இதுவே முதல் நிகழ்வாகும்.
ஒரே புள்ளி, ஒரே கோல் எண்ணிக்கை: புதிய விதிமுறையில் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்ற ஜப்பான் ‘எச்’ பிரிவில் லீக் முடிவில் கொலம்பியா 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஜப்பான், செனகல் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. பொதுவாக இது போன்ற சூழலில் கோல் விகிதாசாரம் பார்க்கப்படும். ஆனால் இவ்விரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்தும், 4 கோல்கள் விட்டுக்கொடுத்தும் அதிலும் சமநிலை வகித்தன. இதனால் இந்த பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு தேர்வாகும் 2-வது அணி எது? என்பதற்கு விடைகிடைக்காமல் ரசிகர்கள் சிறிது நேரம் குழம்பிப்போனார்கள்.
இதைத் தொடர்ந்து ‘பேர் பிளே’ என்னும் புதுமையான விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. அதாவது நடப்பு தொடரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றி விளையாட்டுக்குரிய உத்வேகத்துடனும், ஒழுக்கத்துடனும் ஆடிய அணி எது என்று இரு அணிகளுக்கு இடையே ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் ஜப்பானின் கை சற்று ஓங்கி இருந்தது. 3 லீக் ஆட்டங்களிலும் சேர்த்து ஜப்பான் மொத்தம் 4 மஞ்சள் அட்டை மட்டுமே பெற்று இருந்தது. இந்த எண்ணிக்கை செனகலுக்கு 6ஆக இருந்தது. அதன் அடிப்படையில் ஜப்பான் அணிக்கு 2-வது சுற்று அதிர்ஷ்டம் அடித்தது. உலக கோப்பை வரலாற்றில் இந்த முறையில் ஓர் அணி முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
000
உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவுடன் டிரா கண்ட சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நிஸ்னி நவ்கோரோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘இ’ பிரிவு கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து-கோஸ்டாரிகா அணிகள் மோதின. டிரா செய்தாலே அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் சுவிட்சர்லாந்து அணியும், வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலையில் கோஸ்டாரிகா அணியும் களம் கண்டன.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து சுவிட்சர்லாந்து அணியின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் இருந்தாலும், கோஸ்டாரிகா அணி தான் கோலை நோக்கி அதிக முறை தாக்குதல் நடத்தியது. அதனை சுவிட்சர்லாந்து அணியின் கோல்கீப்பர் யாம் சோமேர் அருமையாக தடுத்து நிறுத்தினார். 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் பிளெரிம் டெஸ்மெய்லி இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
56-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணி பதில் கோல் திருப்பி சமநிலையை எட்டியது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோஸ்டாரிகா அணி வீரர் ஜோயல் கேம்ப்பெல் கோலை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் கென்டால் வாஸ்டன் தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணியின் மாற்று ஆட்டக்காரர் ஜோசிப் டிரிமிக் இந்த கோலை அடித்தார்.
சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெறும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்), கோல் எல்லையில் வைத்து கோஸ்டாரிகா வீரரை, சுவிட்சர்லாந்து வீரர் ‘பவுல்’ செய்தார். இதனால் கோஸ்டாரிகா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி கோஸ்டாரிகா அணியின் கேப்டன் பிரையன் ரூஸ் கோலை நோக்கி பந்தை வேகமாக உதைத்தார். ஆனால் அந்த பந்து கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு திரும்பியது. அப்போது துள்ளிக்குதித்து பந்தை தடுக்க முயற்சித்து கீழே விழுந்த சுவிட்சர்லாந்து அணியின் கோல் கீப்பர் சோமேரின் பின் தலையில் பட்டு பந்து கோலுக்குள் சென்று சுயகோலாக மாறியது.
இதனால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லீக் ஆட்டம் முடிவில் ஒரு வெற்றி, 2 டிராவுடன் சுவிட்சர்லாந்து அணி தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கோஸ்டாரிகா அணி ஒரு டிரா, 2 தோல்வியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
சுவிட்சர்லாந்து அணி தனது அடுத்த சுற்று ஆட்டத்தில், ‘எப்’ பிரிவில் முதலிடம் பிடித்த சுவீடனை (ஜூலை 3-ந் தேதி) எதிர்கொள்கிறது.
மாஸ்கோ, 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 48 ஆட்டங்கள் நடந்துள்ளன. எஞ்சிய 16 ஆட்டங்கள் தான் உலக சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கப் போகிறது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை முதல் 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்கள் நடக்கின்றன. நாளை நடக்கும் 2-வது சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ்-அர்ஜென்டினா (இரவு 7.30 மணி), உருகுவே-போர்ச்சுகல் (நள்ளிரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன
000
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடிய ஈரான் அணியின் முன்கள வீரரான 23 வயது சர்தார் அஸ்மோன் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் 11 கோல்கள் அடித்து அசத்திய சர்தார் அஸ்மோன், இந்த உலக கோப்பையில் எந்த கோலும் அடிக்கவில்லை.
சர்தார் அஸ்மோன் தனது டுவிட்டர் பதிவில், ‘தேசிய அணிக்காக விளையாடியது மிகப்பெரிய கவுரவமாகும். இது எனது வாழ்நாள் முழுவதும் பெருமை அளிக்கக்கூடியதாகும். துரதிர்ஷ்டவசமாக எனது தேசிய அணியில் இருந்து விடைபெறும் முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது. 23 வயதிலேயே எனது வாழ்க்கையில் முக்கியமான, மிகவும் வேதனைக்குரிய முடிவை எடுத்து இருக்கிறேன். எனது தாயார் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் சில இரக்கமற்ற நபர்களின் செயல்களாலும், அவமரியாதையினாலும் வேறுவழியின்றி இந்த ஓய்வு முடிவை எடுக்க வேண்டியதானது’
000
உலககோப்பை கால்பந்து போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வீழ்த்தியது.
பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும். இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா
FIFA June 28th win and falls