மீனவர் பிரச்சினை : சென்னையில் நாளை திமுக போராட்டம்..


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடைபெறுவதை தேர்தல் கமி‌ஷன் தடுக்க வேண்டும். தேர்தல் முறையாக நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை நிறுத்த சதி வேலைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்ன செய்தாலும் அ.தி.மு.க. டெபாசிட் கூட பெற முடியாது.

திருமாவளவன் விளக்கம் அளித்த பின்பும் அவரை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது.

மாயமான மீனவர்களை பற்றி முறையான கணக்கு இல்லை. கலெக்டர் ஒரு தகவல் சொல்கிறார். அமைச்சர் ஒரு தகவல் சொல்கிறார். அனைவரும் ஒவ்வொரு கணக்கு சொல்கிறார்கள்.

மாயமான மீனவர் பிரச்சினை பற்றி கவர்னரிடம் முறையிட முடிவு செய்துள்ளேன். இதற்காக கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளேன்.

மாயமான மீனவர் பிரச்சினையில் அரசின் மெத்தன போக்கை கண்டித்து நாளை சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. மீனவர் அணி சார்பில் என் தலைமையில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.