முக்கிய செய்திகள்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களுக்கு புதிய கடல்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றம், இந்திய ரூபாய் மதிப்பின்படி தலா 26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபராதம் செலுத்தவில்லையென்றால் அவர்கள் 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசின் புதிய கடல்தொழில் சட்டத்தால் தமிழக மீனவர்கள் பாதிப்புள்ளாவார்கள் என்பதை நான் ஏற்கெனவே 7.7.2017 அன்று உங்களுக்கு எழுதிய கடிதம் மூலம் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உரிய தீர்வை எடுக்க வேண்டும். இதனால், தமிழக மீனவர்கள் அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.

அவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கெனவே இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மொத்தம் 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.