முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இன்றைய நாளில் ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். இதன்படி, இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க முதல்வர் பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் என அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.
வாழ்வின் 34 ஆண்டுகள் கட்சிக்காக அர்ப்பணித்து வாழ்ந்த ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றிட உறுதிமொழி ஏற்போம். அதிமுக என்பது ஆயிரம் காலத்துப்பயிர், தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம் என்ற ஜெயலலிதாவின் முழக்கத்தின் படி, மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
முதல்வர் தனது டிவிட் பக்கத்தில்
தமிழ்நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன்வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
என்று பதிவிட்டுள்ளார்