கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதார் யாருமுண்டோ…: பேரவையில் ஓபிஎஸ் புகழாராம்…

தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது.

கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டதாவது:

சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர் என பன்முகத்திறமை கொண்டவர் கலைஞர். காட்சியிலும், ஆட்சியிலும் மன உறுதியுடன் செயல்பட்டவர். நெருக்கட காலத்தில் திறமையாக செயல்பட்டவர். மன உறுதியும், தன்னம்பிக்கையும் தன்னகத்தே கொண்ட தலைவர் கலைஞர்.

கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. அரசியல் எல்லையை கடந்து கலைஞர் மீது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அன்பு கொண்டிருந்தனர். இந்திய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்தவர் கலைஞர். சுதந்திர நாளன்று முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர். அண்ணா மீது பற்றுக்கொண்ட கலைஞர் சமூக நீதிக்காக அரும்பணி ஆற்றினார்.  பச்சை தமிழர் பன்னீர் என முரசொலியில் குறிப்பிடப்பட்டது நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தமது இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.

இதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன், நெல் ஜெயராமன், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோருக்கு  சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்மையில் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பரிதி இளம்வழுதி உள்ளிட்ட 12 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.