முக்கிய செய்திகள்

மாணவிகளுக்கு வழங்கும் இலவச சைக்கிள் டெண்டரில் முறைகேடு?..


தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002-ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
பின்பு, 2005-2006-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.
‘விலையில்லா சைக்கிள் திட்டத்துக்கான டெண்டர்’ இன்று (15-11-2017) இன்று கோரப்படுகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டார முக்கியப் புள்ளிகள் சிலர்,
“விலையில்லா சைக்கிள் தயாரிப்புகளுக்கான டெண்டர் கோரும் நிறுவனமானது, குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் சைக்கிள்களையாவது ஏற்கெனவே உற்பத்தி செய்த அனுபவத்துடன் கூடிய நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இதற்கு மாறாக, சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் என்ற பெயரில், போதிய அனுபவம் இல்லாத சிறிய நிறுவனங்களுக்கு இந்த முறை டெண்டர் வழங்கப்படுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. இதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ‘3 விழுக்காடு கமிஷன் தரப்படும்’ என்று எழுதப்படாத ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இன்றைய டெண்டரில் அல்லுசில்லு கம்பெனிகளும் கலந்துகொண்டு டெண்டர் கோரவிருக்கின்றன.
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் இந்த விலையில்லா சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டின் பிரதான சைக்கிள் தயாரிப்புக் கம்பெனிகளான நான்கு கம்பெனிகள் மட்டும்தான் இதுநாள் வரையில் சைக்கிள் தயாரிப்பு டெண்டர்களை எடுத்து செய்துவருகிறது. இப்படிப் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளில், அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிய அளவில் கமிஷன் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால்தான் தற்போது உதிரிக் கம்பெனிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே கம்பெனியாக காட்டிக்கொண்டு டெண்டரைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி வெற்றிகொண்டால், பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடக்கும் வாய்ப்புள்ளது.
எத்தனை நாள் இந்த ஆட்சி இருக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை… அதனால், கிடைத்தவரை சுருட்டுவோம்’ என்ற ஒரே சிந்தனையில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கைகோத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” என்று அனைத்துத் தகவல்களையும் நம்மிடம் போட்டுடைத்தனர்.
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்தை செல்பேசியில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. நாம் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பிறகு, ஆணையர் அலுவலகத்திலிருந்து நம்மைத் தொடர்புகொண்ட சிறப்பு அதிகாரி (திட்டம்), ”ஆணையர் மீட்டிங்கில் இருக்கிறார். உங்களது கேள்விகளை எங்களிடமே கேட்கலாம்” என்றார். குற்றச்சாட்டுகள்குறித்து அவரிடம் விளக்கம் கேட்டோம். குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறுத்தவர்,
”நாளைதான் (இன்று) டெண்டரே சப்மிட் பண்ணப்போறாங்க. அப்போது டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள் எல்லாம் உண்மையானவைதானா என்பதை முதலில் கமிட்டி ஆய்வு செய்யும். இதில், விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்துவரும் நிறுவனம் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கே டெண்டர் வழங்கப்படும்.
மிகப்பெரிய டெண்டர் இது. அப்படியிருக்கும்போது அவ்வளவு எளிதாக ஏதோ ஒரு சிறு கம்பெனிக்கு டெண்டரைக் கொடுத்துவிட முடியாது; மற்றக் கம்பெனிக்காரர்களும் விட்டுவிட மாட்டார்கள். ஏனெனில், யார் யார் டெண்டரில் கலந்துகொண்டார்களோ அவர்களது முன்னிலையில்தான் டெண்டர் ஓப்பன் செய்யப்படும். அதிகாரிகளும் அப்போது உடனிருப்பர். அதனால், நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே முழுக்க முழுக்க வதந்திதான்!” என்றார் உறுதியாக.