மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தனிநபருக்கான வருவாய் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்து, மோடி அரசு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
2014 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தனி நபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் வருமானவரி வரம்பு உயர்வை எதிர்பார்த்து பொதுமக்கள் ஏமாந்து வந்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் மோடி அரசு தனிநபர் வருமானவரி வரம்பை உயர்த்தி அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமானத்துக்கான வரிக்கழிவுக்கான உச்சவரம்பை ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் ரூபாயில் இருந்து 5இலட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தார்.
இதனால் ஆண்டுவருமானம் 5இலட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு முழுவதும் வரிக் கழிவு உண்டு. சிறுசேமிப்புத் திட்டங்கள், பொதுப் பங்களிப்பு நிதி உள்ளிட்ட குறிப்பிட்ட சில முதலீடு செய்பவர்களுக்கு 5இலட்ச ரூபாய்க்கு மேலும் ஒன்றரை இலட்ச ரூபாய் வரை 80சி என்கிற விதிப்படி வரி விலக்கு உண்டு.
தேர்தல் லாபத்திற்காகவே மோடி அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.