புயலால் பாதிக்கப்பட்ட குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவில்லை : மு.க ஸ்டாலின்..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் படுமோசமாக இருப்பதாகவும், குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கஜா புயல் தமிழக டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 41 பேர் புயலால் பலியான நிலையில், வீடுகள், கால்நடைகள், பயிர்கள் ஆகியவற்றை பலர் இழந்துள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பாதிக்கப் பட்டவர்களிடம் ஆறுதல் கூறிய அவர், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

“தானே, வர்தா, ஒகி வரிசையில் கஜா புயல் பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன்.

அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை!” என்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் தமிழக அரசை பாராட்டியிருந்த ஸ்டாலின், தற்போது மீட்பு பணிகளில் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

“நேற்று தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கஜா புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்!

ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது.

குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை!, இதனை பார்வையிட தமிழக முதல்வருக்கு தயக்கம் ஏன்?” என்று ஸ்டாலின் இன்று ட்வீட் செய்துள்ளார்.