வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளைமறுநாள் பாம்பன்- கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்பதால், முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் இன்று அதிகாலை நிலவரப்படி,
சென்னைக்கு கிழக்கே 780 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கு- வடகிழக்கே 870 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், கஜா புயல் படிப்படியாக வலுவிழந்து நாளை மறுநாள் முற்பகலில், நாகைக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயலால் நாளை இரவு தொடங்கி நாளை மறுநாள் வரை சில மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 சென்டி மீட்டர் வரையும், ஒரு சில இடங்களில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாகவும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதே நேரத்தில் கஜா புயல் கரை கடந்த பின்னர் வலுவிழந்து, உள் மாவட்டங்களை கடந்து தென் மாவட்டங்கள் வழியாக அரபிக் கடலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
புயலால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தால் உடனடியாக சீரமைத்தல், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சாயும் மரங்களை விரைந்து அகற்றுதல்,
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவை குறித்து முதலமைச்சர் ஆலோசித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
சென்னை, கடலூர், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு குழுவும், சிதம்பரத்திற்கு 2 குழுக்களும், நாகப்பட்டினத்திற்கு 3 குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.