முக்கிய செய்திகள்

சூதாட்டத்திற்கு சட்டபூர்வ அனுமதி; வரி விதித்து வருவாய் ஈட்டலாம்: சட்ட ஆணையம் பரிந்துரை..


இந்தியாவில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கி விடலாம் என மத்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பல கோடி ரூபாய் புரளும் சூதாட்டத்தை தடுக்க முடியாத நிலையில் அதனை சட்டபூர்வமாக்கி வரி விதித்து அதன் மூலம் அரசு வருவாய் ஈட்டலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

 

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் சூதாட்டங்கள் சட்டபூர்வமாக உள்ளன. எனினும் இந்தியாவில் அனைத்து வகையான சூதாட்டங்களும் சட்ட விரோதம் என அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளன.

எனினும் இந்தியாவில் சட்டவிரோதமாக, திரைமறைவு சூதாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

 

குறிப்பாக கிரிகெட் போட்டிகள் நடக்கும் போது சூதாட்டங்கள் நடந்து பல கோடி ரூபாய் கைமாறிய சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பல கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்தது சில ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது.

இதில் வீரர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பலருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

 

இந்நிலையில் மத்திய சட்ட ஆணையம் குழு ஒன்று சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, இந்தியாவில் சட்டவிரோதமாக நடக்கும் சூதாட்டங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி விடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிபதி சவுகான் தலைமையிலான இந்த ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

‘‘இந்தியாவில் மகாபாரத காலம் தொட்டே சூதாட்டங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. தர்மன் சூதாடி மனைவி, சகோதரர்களை, நாட்டை தோற்ற தகவல் மகாபாரத புராணங்களில் இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு காலங்களிலும் சூதாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சூதாட்டத்தை நம்நாடு தடை செய்துள்ளபோதிலும், வெளியில் தெரியாமல் நடைபெறும் இந்த சூதாட்டத்தில் பல கோடி ரூபாய் பணம் கை மாறுகிறது.

 

இதன் மூலம் சட்டவிரோத பணிபரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதம் உள்ளிட்டவை வளர்ச்சி அடைகின்றன. இதனை கட்டுப்படுத்த எவ்வளவோ நடவடிக்கை எடுத்து வருகின்றபோதிலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சட்டவிரோத கும்பல்கள் மட்டுமே பணம் சம்பாதிக்கின்றன. எனவே இந்த சூதாட்டத்தை சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

 

சூதாட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். பான் எண், ஆதார் எண் உள்ளிட்டற்றை கட்டாயமாக்கலாம். பண பரிவர்த்தனையை ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கலாம். மேலும் சூதாட்டத்திற்கு வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாம். இதன் மூலம் அரசிற்கு வருவாயும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வரி வருவாயை பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

 

சரியான சூதாட்டம், சிறிய சூதாட்டம் என இரண்டு வகையாக இதனை வகைப்படுத்தலாம். சரியான சூதாட்டம் உயர் வருவாய் பிரிவினருக்கும் சிறிய சூதாட்டம், குறைந்த வருவாய் பிரிவினருக்கும் பரிந்துரைக்கலாம்’’ என சட்ட ஆணையம் கூறியுள்ளது.

 

அதேசமயம் சட்ட ஆணையத்தின் உறுப்பினரான சிவக்குமார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் நாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.