முக்கிய செய்திகள்

காந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நடந்த சம்பவங்களால் மகாத்மா காந்தியின் ஆத்மா வேதனைப்படும் என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டிப் பேசினார்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து காந்தி சந்தேஷ் யாத்திரை 3 கி.மீ .தொலைவுக்கு நடந்தது.

ஒரு டிரக்கில் மகாத்மா காந்தியின் ராட்டையும், அவரின் உருவப்படமும் வைக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. ராஜ்காட்டில் ஊர்வலம் தொடங்கியவுடன் சிறிது நேரம் நடந்து வந்தார் சோனியா காந்தி.

அதன்பின் உடல்நலக் குறைவு காரணமாக பாதியிலேயே சென்றார். ஊர்வலத்தில் ராகுல் காந்தி முழுமையாகப் பங்கேற்றார்.

ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

”மகாத்மா காந்தியின் பெயரைக் கூறி இந்த நாட்டை அவர்களின் சொந்த விருப்பத்துக்கு ஏற்ப வழிநடத்திக் கொண்டு செல்கிறார்கள்.

மகாத்மா காந்தி இந்தியாவின் அடையாளம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பை இந்தியாவின் அடையாளமாகக் கொண்டுவர விரும்புபவர்கள் மகாத்மா காந்தியின் பன்முகக் கலாச்சாரச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

பொய்யான அரசியல் செய்பவர்களால் காந்தியின் அகிம்சை சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. உண்மை மற்றும் அகிம்சையைப் பின்பற்றியவர் காந்திஜி.

அதிகாரம் அனைத்தும் தனது கைகளில் வர வேண்டும் என்று நினைப்பவர்களும், காந்தியின் சுயராஜ்ஜிய சிந்தனைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

காந்தியின் காலடிகளையும், கொள்கைகளையும் பின்பற்றிச் செல்வது எளிதான காரியம் அல்ல.

காந்தியின் பெயரைப் பயன்படுத்தி நாட்டைத் தாங்கள் நினைத்த போக்கிற்குக் கொண்டு செல்வது இது முதல் முறை அல்ல, ஆனால் காந்தியின் சித்தாந்தம் வலிமையானது, அவர்களால் அதை வெற்றி பெற முடியாது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது மகாத்மா காந்தியின் ஆத்மாவுக்கு வலியைக் கொடுக்கும்.

காந்தியின் வழியைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயிகளுக்கு வசதிகள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை பாரபட்சமின்றி வழங்கும்”.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.