Gnanakoothan Interview
ஞானக்கூத்தன் நேர்காணல் : சந்திப்பு குவளைக் கண்ணன் – நன்றி : அழியாச்சுடர்கள்
___________________________________________________________________________________________________________
புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க?
தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் நலிவடைஞ்சு பக்தி இலக்கியம் தோன்றுது. அதை யார் தொடங்குனாங்கன்னும் உறுதியாச் சொல்ல முடியாது. அதுக்கப்புறம் நவீன காலத்துல தாயுமானவர்கிட்ட உள்ளடக்க மாறுதல் வருது. அது ஒரு இயக்கமா மாறல. அதுவும் பக்தி இலக்கியத்தோட சேர்ந்திருது. அப்புறம் 1800களில் ஆங்கிலேயர்கள் வந்து ஒரு காரியம் பண்ணாங்க. அவங்களோட நோக்கம் நம்மோட இலக்கியங்களை அவமானப்படுத்தறது. நம்மோட இலக்கிய மதிப்பை இழக்கச் செய்வது அவங்களுக்கு முக்கியமான நோக்கமா இருந்தது. அவங்க அத வெற்றிகரமா செஞ்சாங்க. தேசிய இயக்கம் வந்தபோது நம்ம இலக்கியத்துக்கு மறுபடியும் மதிப்பு வந்தது. தேசிய அரசியல் இயக்கமா கலை இலக்கியம் மாறி நம்பிக்கை தரக்கூடிய மறுமலர்ச்சி இயக்கமா ஆவதைப் பாரதியார் கிட்ட நாம பாக்குறோம். ஆனா அதுவும் ஒரு கட்டத்தோட நின்னு போச்சு. பாரதியார் ஒரு கவிஞரா இந்தப் புதிய கருத்துகளச் சொல்ல முடிஞ்சுதே தவிர, ஒரு இயக்கமா மற்ற மொழி இலக்கியங்களுக்கு நிகரான இலக்கிய முயற்சிகளத் தூண்டக்கூடியதா அந்தப் போக்கு வரல. தன்மானத்த மீட்டுக்கொடுத்ததோட புதிய இலக்கியத்தைப் படைக்க என்னென்ன செய்யணுமோ அதைச் செய்யுறதுதான் தமிழ் நவீன இலக்கியத்தோட தொடக்கம். அது சிறுகதையானாலும் நாடகமானாலும் கவிதையானாலும்.
கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது. அப்ப அதிலிருந்து மீள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டது. படைப்பிலக்கியம்னு ஒண்ணு கவிதையில் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அதற்குத் தடையா இருந்த விஷயம் இலக்கணம். யாப்பிலக்கணம். அது பாரதியார் காலத்திலேயே நவீனத்துவம் ஆகிட்டுது. நமக்கு வால்ட் வில்ட்மன் தெரிஞ்சுட்டுது. ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிஞ்சுது. கவிதைங்கிறது யாப்பில்லாமயும் படைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுது. எலியட்டோட கருத்துகள் நமக்கு வந்தன. இதை உணர்ந்தது முதல்ல பாரதியார் பிறகு பிச்சமூர்த்தி, ராஜகோபாலன். அந்தக் கட்டத்துல வசன கவிதைன்னு ஒண்ணு இந்தியா முழுவதும் வர ஆரம்பிச்சிட்டுது. அந்த வசன கவிதையைப் பிச்சமூர்த்தியும் கு. ப. ராவும் 1939ல எழுத ஆரம்பிச்சாங்க. இப்போ எழுபது வருஷம் ஆயிருச்சு. இடையில அவங்க வசன கவிதை எழுதுறத விட்டுட்டாங்க. அப்புறம் மேற்கத்திய இலக்கியத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு இயக்கம் நம்மிடையே இல்லாமல் போயிருச்சு. புதுக்கவிதைங்கிற பேர்ல நம்முடைய கவிதைகள் இனிமே இப்படி இப்படி இருக்கணும் அப்படிங்கிற ஒரு அறிக்கையைத் தயாரிச்சாங்க. முதல் தடவையா தமிழிலக்கியத்துல ஒரு அறிக்கையை வெளியிட்ட இயக்கம் தோன்றியது அதிசயமான ஒரு நிகழ்வு. 1958இல் க.நா.சு அதைச் செஞ்சாரு. புதுக்கவிதைங்கிற பேரே உலக இலக்கியம் தொடர்பானது. புதுசுங்குற சொல் டபிள்யூ.ஹெச். ஆர்வெல் கொண்டு வந்தது. நியூ சிக்னேச்சர். இடதுசாரி தொடர்பான நியூங்கிறது அதையொட்டிப் புதுக்கவிதைன்னு க.நா.சு செஞ்சாரு. வசனம் வேற கவிதை வேற என்ற விமர்சனங்களை அது ஏற்படுத்தியது.
1958ல புதுக்கவிதை அறிக்கையோட இடதுசாரி சார்புடைய சரஸ்வதில க. நா. சு அந்த இயக்கத்த ஆரம்பிச்சு வச்சாரு. 59ல எழுத்து மூலமா அது பரவ ஆரம்பிச்சுது. தமிழிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய இயக்கத்தைப் புதுக்கவிதை செய்ததால் அதை நாம் கொண்டாட வேண்டிய கடமை இருக்குது. பெருமைப்பட வேண்டிய அவசியம் இருக்குது. அதுக்குக் காரணம் சிற்றிதழ்கள்தான் புதுக்கவிதையைக் கண்டு பிடிச்சது, உருவாக்கியது. அரசியல் சார்பற்ற மத, சமய சார்பற்ற ஒரு இலக்கியத்தை, வெளியை உருவாக்கி கலை இலக்கியக் கருத்துகளைப் புதுமைப்படுத்தியது. அந்த மாறுதலோட சின்னம்தான் புதுக்கவிதை.
தமிழுக்குப் புதுக்கவிதை என்ன பண்ணியிருக்கு?
புதுக்கவிதை சம காலத்த அப்படியே பிரதிபலிச்சிருக்கு. இன்றைய வரை புது விஷயம் உள்ள வர்றதுக்குப் புதுக்கவிதை திறந்துவைத்த கதவுகள் அப்படியே இருக்கு. அரசியல் கட்சிகள்லகூடப் புதுக்கவிதை எழுதுற குழுவும் மரபுக்கவிதை எழுதுற குழுவுமா இருக்கு. ஒரு புதிய உணர்வைப் புதுக்கவிதை உருவாக்கியிருக்கு. நாடகம், சிறுகதை எல்லாத்துக்கும் சேர்த்ததான ஒரு பொது அடையாளம் புதுக்கவிதை. அந்தந்தக் காலத்துல எது புதுசோ அது புதுக்கவிதைன்னு க.நா.சு. சொல்லியிருக்காரு.
புதுக்கவிதை வந்தப்புறம் மொழி என்ன ஆகியிருக்கு? மொழிக்குப் புதுக்கவிதை இயக்கம் என்ன செய்திருக்கிறது?
புதிய புரட்சியை உண்டுபண்ணியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் உருவாகியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் புதிய பொருளைக் குறிக்கிறது. அந்தப் புதுப் பொருள் காலத்தின் அடையாளம். இப்போ குறுஞ்செய்தி கைபேசியெல்லாம் கவிதைல வருது. இது மரபுல சாத்தியமே இல்லை. புதுக்கவிதைல சந்தம் இல்லாததுனால எந்தச் சொல்லையும் நீங்க கவிதைக்குள்ள கையாள முடியும். சந்தம் இருந்தபோது சொற்களப் பயன்படுத்தறதுல நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதுல இருந்து விடுபட்ட புதுக்கவிதை ஒரு புதிய கலாச்சாரத்தைக் கொண்டுவந்திருக்குன்னும் சொல்லலாம். ஒரு பொது தளத்தில் சந்திக்க முடியணும். உங்க மத நம்பிக்கை வேறயா இருக்கலாம். அரசியல் ஈடுபாடு வேறயா இருக்கலாம். உங்க சினிமா வேறயா இருக்கலாம். ஆனா புதுக்கவிதைன்னு வரும்போது நாம சந்தித்துப் பேச முடியுது. நமக்கு ஒரு பொது வெளி கிடைக்குது.
அதாவது எழுதுறவங்களுக்கு, வாசிக்கிறவங்களுக்கு, ஆர்வம் உள்ளவங்களுக்கு மட்டுமான பொது வெளி.
ஆமா இலக்கியத்துக்கு ஒரு சமுதாயம் இருக்கு இல்லையா?
இதுக்கு அப்பாற்பட்டு, திக இருந்தது. திமுகன்னு ஒரு கட்சி வருது. தமிழ் காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னதெல்லாம் அவங்கதான். அப்புறம் திமுகன்னு அரசியல் கட்சியா வரும்போது தமிழக் கொண்டாடுறாங்க. அப்படித்தான் அரசியலுக்கே வர்றாங்க. அங்க மாற்றம் வருது இல்லியா? இந்த மாதிரி என்ன மாற்றம் இங்க வந்தது?
நவீனமாக ஆக மறுத்ததால காட்டுமிராண்டி பாஷைன்னு பெரியார் சொன்னார். அவர் பாஷைல அவர் தீவிரமாப் பேசுவாரு. இது பழசா இருக்கு புதுசா ஆக மாட்டேங்குதுங்கிறதுதான் அவரோட கோபம். அவருடைய பாஷையேகூட மேடையில் சாதாரணமா பேசுற பாஷைதான். எழுதுகிற பாஷை பழங்கால பாஷை. அதை நவீனமாக்க அவரால முடியல. அதனால அந்த பாஷை காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னார். பிற்பாடு திமுக வருது. அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது. புதுமைப்பித்தனை எடுத்துக்கங்க, இப்ப நான் படிச்சேன். அனாதையாய்க் கிடந்த தமிழ் எழுத்தாளர்ன்னு சுந்தர ராமசாமி எழுதியிருக்கார். அப்ப திமுக இருந்தது. அதுக்கு ஏதாவது அக்கறை இருந்திருந்தா புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசியிருக்கனும், ஏதாவது செஞ்சிருக்கனும் இல்லையா? பாரதியார் மகாகவியாய் இல்லையான்னு அடிச்சிக்கிட்டாங்க. அப்ப திமுகவுல இருந்த யாராவது ஏதாவது கருத்து சொன்னாங்களா? திமுகவுக்குப் பாரதி மேல் ஏதாவது அக்கறை இருந்ததா? தமிழ்க்குடிமகன்னு ஒரு அமைச்சர் இருந்தாரு. சுந்தர ராமசாமிக்கு ஏன் விருது கொடுக்கப்படலைன்னு கேள்வி எழுப்பியபோது அவர் சொல்றாரு, சில பேருக்கு சுந்தர ராமசாமி பெரிய எழுத்தாளரா இருக்கலாம், தமிழக அரசு பார்வைல அப்படி இல்லாமல் இருக்கலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. ஆனால் இதை உடைக்கிற ஒரு சமுதாயத்தைப் பார்வையைப் புதுக்கவிதை அந்தக் கட்சிக்குள்ளயும் உருவாக்குச்சு. திமுகவின் பழைய தமிழ்க் கொள்கை பிரச்சாரத்துக்குப் பயன்பட்டதே தவிர நவீன இலக்கி யம் உருவாகப் பயன்படல. புதுக் கவிதை உருவான பிறகுதான் புதிய தலைமுறையும் உருவானது. கட்சியின் கோட்பாட்டை அடுத்த தலைமுறை உணரத் தொடங்கியது.
க.நா.சு அறிக்கையோட வெளிப்பட்ட அன்றைய புதுக்கவிதைக்கும் இப்போ உள்ள புதுக்கவிதைக்கும் என்ன மாற்றத்தை உணர்றீங்க?
க.நா.சு புதுக்கவிதைன்னு பேர் வச்சதும் 59ல பிச்சமூர்த்தியோட ‘பெட்டிக்கடைக்காரன்’ கவிதை மறுபிரசுரம் ஆச்சு. புதுசா எழுதல. 58ல புதுக்கவிதைன்னு வச்சு க.நா.சு சரஸ்வதியில விவாதத்தத் தொடங்குன உடனே தற்செயலா தோன்றிய எழுத்து பத்திரிகை அதை சுவீகரித்தது. புதுக்கவிதை பற்றிய க.நா.சுவின் கருத்து புரட்சிகரமானது. அவர் அறிக்கையில் சொன்னதவிட எழுதிக்காட்டியது அதிகம். அவரோட கவிதைகளைப் படிச்சீங்கன்னா அது இன்னும் புரட்சிகரமானதுங்கறது தெரியும். க.நா.சு பிச்சமூர்த்திக்குக் கொஞ்சம் பிந்தியவர். அவர் புரட்சி பண்ணனும்னு விருப்பப்பட்டவரல்ல. இதை எழுத்து பத்திரிகை மற்றும் எல்லோரோடயும் தொடர்புள்ள கனகசபாபதியும் அவரோட கட்டுரையில் குறிப்பிட்டிருக்காரு. உதாரணத்துக்குப் பிச்சமூர்த்திக்கு சிகரெட் பிடிக்காது. அது நவீன காலத்து அடையாளம். சிகரெட் பிடிக்கிறது. மீசை வச்சுக்கிறது எல்லாம் 50, 60களில் புதுமையான விஷயம். பல சமூகங்களில் மீசை வச்சுக்கிறது, பேண்ட் போடுறது கணுக்காலுக்குக் கீழே வேட்டி கட்டுறது எல்லாம் அனுமதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு சமூகம் இருந்தது. பிச்சமூர்த்தியோட கவிதை இதை அங்கீகரிக்கல. ஆனா க.நா.சு எல்லாவிதமான புரட்சிகளையும் புதுமைகளையும் அங்கீகரித்தவர்.
தமிழ்க் கவிதையோட போக்குல க.நா.சு காலத்துக்கும் இப்போ உள்ள போக்குக்கும் என்ன மாற்றமிருக்கு?
க.நா.சு கவிதைகளில் தென்பட்ட புரட்சிகரமான கூறுகளோட விரிவடஞ்ச போக்குதான் இப்போ உள்ள கவிதைகள்னு சொல்லலாம். பிச்சமூர்த்தி நவீனத்துவத்தை ஏத்துக்க விரும்பாத ஒரு கவிதையை விரும்புறாரு. பாலியல்ரீதியிலான சுதந்திரம், சுய பாலின ஈர்ப்பு போன்ற விஷயங்களப் பேசற கவிதைகளை அவங்க விரும்பல. புதுக்கவிதையிலயும் ஒரு வைதீகக் குழுவும் அதற்கு எதிரானஅவைதீகக் குழுவும் இருக்கு. இன்னிக்குக் கவிதையில் இந்த அவைதீகக் குழுதான் இருக்கு. பழமைய மறுதலிச்சு உருவாகறது தான் புதுக்கவிதையோட சித்தாந்தமே. பொலிடிக்கலா பார்த்தா அவைதீகம் அதாவது மரபை மீறுதல்தான் க.நா.சுக்குப் பிடிச்சது. நீங்க பழமைய மறுக்கறவரா மீறுகிறவரா இருக்கும்போதுதான் உங்க படைப்புச் செயல் பாட்டுல ஜீவன் இருக்கும்.
ஆரம்பம்னு பிச்சமூர்த்தியை எடுத்துக்கிட்டா எட்டு பத்துப் பேரு முக்கியமானவங்க. ஏன்னா அந்த மாதிரி கவிதைகள் தமிழ்ல அதுக்கு முன்னாடி இல்ல. சி.மணி, நீங்க, பிரமிள், நகுலன், சுந்தர ராமசாமி, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம், பிரம்மராஜன், கலாப்ரியா இவங்க வரைக்கும் நாம் வச்சுக்கலாம். இதுக்கு அப்புறம் ஒரு தலைமுறை வருது. இவங்க என்னவெல்லாம் முயற்சி பண்றாங்க? புதுக்கவிதையில இன்னும் சொல்லப்படாத விஷயங்கள் என்ன?
தொட்ட பிற்பாடுதான் இது தொடக் கூடாத விஷயம் தொட்டுட்டாங்கன்னு தெரியுது. அதுவரைக்கும் நமக்குத் தெரியாது. ஒரு பெண் தன் பாகத்தைத் தொட்டுப் பார்க்குறது கவிதைல ஒரு ஆச்சரியமான விஷயம். இப்ப சல்மா கவிதைல ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு முடி முகவாயில் வளருது. இதெல்லாம் தொடக் கூடாத இடங்கள். பெண்ணுன்னா சந்திரவதனம் நமக்கு. அவங்களுக்கு ஒரு முடி வளரும் அவஸ்தை சொல்லப்பட்டிருக்கு. ஆனா புதுக்கவிதைல இது எல்லாத்துக்கும் திறந்துவிட்டாச்சு. இந்தியக் கவிதைகள்ல சில வெளிநாட்டுக் கவிஞர்களின் தாக்கம் இருப்பதை அவதானிப்புச் செய்யலாம். பாப்லோ நெருதாவோட பாதிப்பு, லிரிக்ல வெஸ்டர்ன் பாதிப்பு இருக்கு. இயலுக்கும் இசைக்கும் நடுவில் கவிதைக்கும் பாட்டுக்கும் நடுவில் பாரதியார் கவிதைகள் போல. அதைக் கண்டுபிடிச்சது பாரதியார்னு சொல்லலாம். ரெண்டுக்கும் பொதுவா இருக்கும். கம்பன் பண்ணியிருக்காரு. இப்போ உள்ள கவிதைகள் பாடலாகிருச்சு. ஒரு பிரச்சினை என்னன்னா கவிதைகளின் தீவிரத் தன்மை குறையுது. தனித்தன்மை கொண்ட ஒரு குழு உருவாக வாய்ப்பிருக்கு. காலச்சுவடுல வர்ற கவிதையும் தினமலரில் வர்ற கவிதையும் ஒண்ணான்னு கேட்டா இல்லன்னு சொல்லலாம். ஆனா இன்னொருவிதத்தில அப்படியெல்லாம் சொல்ல முடியாது. காலச்சுவடு, உயிர்மைல வர்றதுதான் கவிதை தினமலரில் வர்றது கவிதையில்லன்னு சொல்ல ஒரு விமர்சகன் உருவாகணும். இப்ப நிறையப் பேர் இருக்காங்கன்னு சொல்லலாம். கவிதை இயக்கம் வரும்போது பல வெளிநாடுகளில் பல்கலைக்கழகத்திலதான் நடக்கும். அவங்களே மாணவர்களுக்குப் பணம் கொடுத்துப் பத்திரிகையெல்லாம் நடத்தச் சொல்லுவாங்க. நாம அடிமைப்பட்ட நாடா இருந்ததால படிக்கறவங்க எண்ணிக்கை ஆரம்ப காலத்துல ஐம்பதுக்கு அதிகமா இல்லாததால இயக்கம் பல்கலைக் கழகத்துக்கும் தமிழ்த் துறைக்கும் வெளிய நடந்தது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களும் இதில் ஈடுபாடு காட்டும்போது வேறொரு பிரிவு உருவாகும்.
பெரிய பேராசிரியர்கள் தமிழ்க் கவிதைக்குப் பங்களிப்பு செய்தார்களா?
இல்ல. பங்களிப்புன்னு இல்ல. அவங்க புகுந்து மாணவர்களுக்கு வேற ஒண்ணக் காமிப்பாங்க. இதுதான் நவீன இலக்கியம்னு சொல்வாங்க.
இன்னிய வரைக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் புதுக்கவிதைகள் அநேகமா இல்ல. அவங்களுக்கு எளிமையாத் தெரியும் அப்துல் ரகுமான் வகையைத்தான் வச்சிருக்காங்க, ஆசிரியர்கள் சுலபமா குறிப்புரை கொடுத்துருவாங்க. ஆங்கிலத்தில் டி. எஸ். எலியட்டெல்லாம் பாடமா வச்சிருக்காங்களே? இங்கே என்ன தடையிருக்கு?
பண்பாட்ட பத்தி அவங்களுக்கு ஒரு கருத்து இருக்கு.
இங்கே தமிழ்ல இருக்கா?
ஆமா. மேல்மட்டத்துல இருக்குறவங்களுக்கு ஒரு கருத்து இருக்கு. அதுக்கு எதிரா மக்கள்ட்ட இருக்குற கருத்த இலக்கியத்துல பிரதிபலிக்க விடமாட்டாங்க.
தமிழ்த் துறையாளர்கள் பெரும் பான்மையானவர்கள் கலாச்சாரத்தைப் பாதிப்பில்லாம பாத்துக்கிடணும்னு நெனைக்கிறாங்க. தமிழ் இலக்கியத்துலகூடக் கைக்கிளைத் திணை, பெருந்திணை அதாவது வயதில் குறைந்த ஆண்மீது ஆசைகொள்வது, மறுமணம் போன்றவற்றைத் தேட வேண்டியிருக்கு. பெண் ஆசைப்பட்டாங்கிறத ரொம்ப மறைமுகமாத்தான் சொல்லுவாங்க. அவையெல்லாம் இலக்கியத்தில் ஏற்புடையதல்ல. புதுக்கவிதையில் அதெல்லாம் ஏற்புடையது. ‘மதுரை மீனாட்சி அம்மன் கன்னிமை கழியும்போது’ அப்படின்னு க.நா.சு எழுதினாரு. பயங்கரமான எதிர்ப்பு. கண்டிப்பு. நாம் கண்டுகொள்வதில்லை. நம்ம சமூக அமைப்பு சில உதவிகள் செய்து தப்பிச்சுப்போக வைத்தது. அதனால இந்த வகை கவிதைகள உள்ள வர விடாமத்தான் வச்சிருக்காங்க. புதுக்கவிதைல நவீன இலக்கிய தாக்கம் வராம பாத்துக்கு வாங்க. இத ஆதரிக்கிற பேராசிரியர்கள் யாராவது இருந்தா அவங்களச் சேர்க்கமாட்டாங்க. சங்க இலக்கியத்துல பச்சையா மாமிசம் சாப்பிடுற ஒரு சம்பவம் இருக்கு. இன்னிக்கும் அந்தச் சமூகம் இருக்கு, ஆனா அத பத்தி நம்ம இலக்கியம் பேசல. கவிதைல சொல்லல.
இன்னிக்கு எழுதப்படுற கவிதைகளை, எல்லாச் சிறுபத்திரிகைகளிலும் வர்ற கவிதைகளை நீங்க எப்படிப் பாக்குறீங்க?
ஆழம் அதிகமா இருக்கு. எடுத்துரைப்புச் செய்து சொல்லக்கூடிய துறை வளரல. சின்னச் சின்ன மதிப்புரைகள்தான் வருதே தவிர அதையும் கவிஞர்களே பண்ணிக்கிடறாங்க. அது பெரிய துரதிர்ஷ்டம். மற்றபடி கவிதைகள் ரொம்ப ஆழமுள்ள கவிதைகள்தாம் வந்துட்டிருக்கு.
இந்த ஐம்பது வருஷத்த வளர்ச்சின்னு சொல்ல முடியுமா?
அசுர வளர்ச்சி. அது தமிழ் மொழியின் சக்தின்னு சொல்லணும். தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும் ‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக் குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப் பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை. திருநாவுக்கினியர் சொன்ன மாதிரி அந்தந்தக் காலத்துச் சொற்கள் தான் கவிதைக்குக் கொடுக்குற சத் துணவு. பெரிய ஆன்மீக மொழியா இருக்க அது முயன்றதே கிடையாது. 1500 வருஷ ஆன்மீகப் பாரம்பரியம் இருந்தும் இராமானுஜர், சங்கரர் போன்ற தமிழ் பேசிய சிந்தனையாளர்கள் இருந்தும் ஆன்மிக எல்லைக்குள் போகாம பூமியிலேயே இருக்கும் மொழி தமிழ்.
சமஸ்கிருதக் கவிதையியலுக்கும் தமிழ்க் கவிதையியலுக்கும் என்ன வித்தியாசத்தைப் பாக்குறீங்க?
பெரிய வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. தமிழ் செய்யுள் மாதிரி தொழில்நுட்பத்தப் பேசிட்டு விட்டுருது. சமஸ்கிருதம் நவீன ஐரோப்பிய மொழி மாதிரி ஆராயுது.
தமிழ் கவிதையியல் இலக்கணத்த மட்டும் பேசிட்டு விட்டுடுது, சமஸ்கிருதம் இலக்கணத்தப் பத்தியும் அதத் தாண்டியும் பேசுதா?
ஆமா. அதன் உள்ளடக்கம் எப்படிச் சொல்லப்படுது. சொல்லுக்குக் குறிப்புச் சக்தி எங்கிருந்து கிடைக்கிறது. அதுதான் தொனி. இன்னியவரைக்கும் தீர்க்கக்கூடிய விஷயமாவே இல்ல. சொல்லப்படற வார்த்தைகளில் இல்லாத அர்த்தம் கேட்பவனுக்கு எப்படிக் கிடைக்கிறது? அது பெரும் ரகசியம். சொல்லுக்கு அது குறித்த பொருளத்தான் குறிக்கிற சக்தி இருக்குதுங்கிறது இலக் கணம். அது உண்மையானால் சொல்லால் குறிக்கப்படாத பொருள் கேட்பவனுக்கு எங்கிருந்து வருது? அது சொல்லிலேயே இருக்கிறதுங்கிறதுதான் சமஸ்கிருதத்தோட வாதம்.
உங்க கவிதைகளில் பொது மனத்தை, அரசியல் காரணங்களால் கட்டமைக்கப்பட்ட பொது மனத்தைக் கிண்டல் பண்றீங்க. கேள்வி கேக்குறீங்க, அது உணர்வுபூர்வமாப் பண்ணியதா?
ஆமா. நான் காப்பியங்களில் நம்பிக்கைகொண்ட கவிஞன். பெரிய காவியங்களைத் தவிரச் சின்னச் கவிதைகளை எழுத முயன்றதே கிடையாது. 1500, 2000 வரிக்குக் குறைஞ்சு நான் எழுதியதே கிடையாது. அப்புறம்தான் இந்த மாதிரி சின்ன கவிதைகள் எழுதுறாங்க அப்படின்னு என்னோட பள்ளிப் பருவத்துலதான் எனக்குத் தெரிஞ்சுது. வோட்ஸ்வொர்த் கோல்ட்ஸ்மித்தெல்லாம் பார்த்துட்டு இனிமேல் இப்படித்தான் எழுதணும்னு மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். கம்பன் காப்பியங்களை இயற்றியவன். அரசியலால் மிகவும் துன்புறுத்தப்பட்டவன். அவ்வளவு பெரிய கவிஞனைத் தஞ்சாவூர்ல ஒரு தாசிட்ட போயி ஒரு பாயிரம் வாங்கிட்டு வாம்பாங்க, அவட்ட போயி வாங் கிட்டு வருவான். கூலி வேலைக்குப் போவான். நில்லா நெடுஞ்சுவரேன்னு ஒரு கவிதை வரும். ஒரு அரசியல் சார்ந்த தொனி ஒண்ணு கம்பன்கிட்ட ஊடுருவியிருக்கும்.
‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்…’ ‘எல்லா மொழியும் நன்று தமிழும் அதிலே ஒன்று.’ 67ல தமிழ் பேசினவங்க ஆட்சிக்கு வராங்க. இந்த மாதிரி கவிதைகளுக்கு இடம் கிடையாது. ஆனா நீங்க எழுதறீங்க. இதை காரணமாத்தான் எழுதனீங்களா?
சமஸ்கிருதம் படிச்சேன். தமிழ் படிக்கணும்கிறதுக்காகத் தமிழ் படிச்சேன். வித்வான் படிக்க ஆசைப்பட்டேன். முடியல. வித்வான் வகுப்புக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் படிச்சேன். தொல்காப்பியம் 17,18 வயசுலயே படிச்சிட்டேன். ராமாயணத்தல்லாம் முழுசா படிச்சிட்டேன். சங்க இலக்கியம் முழுவதும் முழுசா படிச்சிருக்கேன். இப்போகூட நற்றிணை படிச்சேன். எங்க அப்பா சமஸ்கிருதம் படிக்கிறவர். அதனால சமஸ்கிருதம் படிச்சேன். கம்பன, சங்கப் புலவன, ஆண்டாள, நவீன காலத்து சுந்தர ராமசாமிய, மௌனிய, ஆனந்த, உங்க கவிதைய, கனிமொழிய எப்படிப் படிக்கிறனோ அப்படி ராமாயணத்த அதனோட மொழியில, பகவத்கீதைய, சாகுந்தலத்த அதனோட மொழியில படிச்சேன். கன்னடத்தையும் நான் படிச்சேன். எல்லா மொழிகளும் சந்தோஷமாத்தான் இருந்தது, ஏற்றதாழ்வுகள் ஒண்ணும் கிடையாது. இந்த சந்தோஷத்த நாம கெடுத்துக்கக் கூடாது.
உங்கள் பென்சில் படங்கள் பூரா உங்க பிள்ளைப்பருவ வாழ்க்கை தானா?
வெளிப்படையாகச் சொல்லப் போனால் நான் இருபத்தோரு வயசுக்கு மேல வளரல. எனக்கும் என் கவிதைக்கும் ஒண் ணும் நடக்கல, அதுதான் என் பிரச்சினை. அத ஒரு இடத்துல சொல்லிருக்கேன். இருபத்தோரு வயசோட எல்லாம் முடிஞ்சுபோச்சு. அப்புறம் எப்படி வாழ்றது? ஓட்டு போடுறதுக்கு முன்னாடியே வாழ்க்கை முடிஞ்சுபோச்சுன்னா பாக்கி வாழ்க்கையை என்ன செய்றது? இப்ப 72 வயசாகுது. அம்பது வருஷம் ஓட்டியிருக்கேன். அப்படி ஒரு சிக்கல் வாழ்க்கைல. நாலு வயசுலயிருந்து 21 வயசு வரைக்கும்தான் எடுக்குறேன்.
மொத்தத்துல தமிழ்ல நேர்மறையான விஷயங்கள் நடந்திருக்கா?
நேர்மறையான விஷயங்கள் நடந்திருக்கு. தனிப்பட்ட சில கஷ்ட நஷ்டங்கள் இருக்கு. அது இருக்கத்தான் செய்யும். மொழின்னு பார்க்கும்போது அற்புதமா இருக்கு, புதுக்கவிதை வந்ததுக்கப்புறம் ஒரு உலகத் தரம் வந்திருக்கு. ஒரு பக்கம் செம்மொழின்னு சொன்னாலும் சிரமப்பட்ட மொழியா இருந்தது. இலக்கியம்னு வரும்போது தமிழ் ஒரு முதிராத மொழி. புதிய விஷயங்கள் அதுல சொல்ல முடியாது. புதுக்கவிதை அதை நவீனப்படுத்தியிருக்கு. அதனால அது உலகத் தரம் கொண்டதா ஆகியிருக்கு. ஒரு மேடை இருந்தா அதுல நாமளும் இருக்கணும். இல்லாட்டி இருக்குறதுல என்ன அர்த்தம் இருக்கு? நவீன இலக்கியத்தால தமிழுக்கு உலகக் கவனம் கெடச்சுருக்கு. தமிழ் அதுக்குத் தகுதியானதுங்கறதை நாம பண்ணியிருக்கோம். அதுவும் குறுகிய காலத்தில். அம்பது வருஷம்ங்கிறது மொழிக்கு ரொம்பக் குறைந்த காலம்.
_________________________________________________________________________________________________