நிலக்கரி துறையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சீர்திருத்தமாக, தனியார் நிறுவனங்கள் நிலக்கரியை வெட்டி எடுத்து வர்த்தகரீதியாக விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் இந்தியன் கோல் நிறுவனத்தின் தனியுரிமையை முடிவுக்கு வந்துள்ளது. உள்நாட்டில் இருந்து அதிகமான நிலக்கரியை ஏற்றுமதி செய்யவதற்கான கதவுகளை மத்திய அரசு திறந்துவிட்டுள்ளது.
இப்போதுள்ள நிலையில், உள்நாட்டில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை வர்த்தகரீதியாக விற்பனை செய்ய அனுமதியில்லை.
மாறாக, சிமென்ட், உருக்காலை, மின் உற்பத்தி, அலுமினியம் உருக்காலை ஆகியவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. கோல் இந்தியா லிமிட்டட் மட்டுமே சந்தையில் 80 சதவீத பங்குகளை வைத்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவின் மூலம், இனி சந்தையில் கடும் போட்டி நிலவும்.
இது குறித்து மத்திஅமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “ பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று கூடியது. அந்த குழுவில் நிலக்கரியை வெட்டி எடுத்து வர்த்தகரீதியாக நிறுவனங்கள் விற்கலாம் என்ற ஒப்புதலை இன்று அமைச்சரவைக் குழு அளித்தது.
ஒரு டன் நிலக்கரிக்கு அதிகமான விலையை அரசுக்கு எந்த நிறுவனம் தருகிறதோ அந்த நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். கடந்த 1973-ம் ஆண்டுக்கு பின் நிலக்கரித் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமாகும்.
இதன் மூலம் அதிமான முதலீடு ஈர்க்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவம் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் சந்தையில் போட்டியை அதிகப்படுத்தி, சிறந்த தொழில்நுட்பத்தை புகுத்த உதவும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.