பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: பாஜக எம்.பி. கருத்துக்கு சிதம்பரம் பதில்..

நம்முடைய நாட்டுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி)  எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரிச்சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே ”

நம்முடைய நாட்டுக்கும் ஜிடிபிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜிடிபி பற்றி பேசுபவர்கள் எல்லாம் தவறானவர்கள். நம்முடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியுடன் ஜிடிபியை தொடர்புப்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

ஜிடிபியைக் காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்

ஜிடிபி என்பது கடந்த 1934-ம் ஆண்டுதான் வந்தது. அதற்கு முன் எந்தவிதமான ஜிடிபியும் இல்லை. பொருளாதார வல்லுநர் குஸ்நெட் கூறுகையில்,

ஜிடிபியை பைபிள், ராமாயணம், மகாபாரதம் போன்று நம்பத்தேவையில்லை. எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவுகோலாக ஜிடிபி இருக்காது என்றார்” எனத் தெரிவித்தார்.

மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய விளக்கமாக, ” நிலைத்த பொருளாதார வளர்ச்சி என்பது, வரிசையில் நிற்கும் கடைசி மனிதருக்கும் கிடைக்க வேண்டும்.

ஜிடிபியைக் காட்டிலும் மகிழ்ச்சிதான் முக்கியம்” எனப் பேசினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகவும் வீழ்ச்சி அடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஆளும் பாஜக தரப்பில் இருந்து எம்.பி. ஒருவர் பேசிய இந்த கருத்து அவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதை மறைமுகமாக சுட்டிக் காட்டி முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ” ஜிடிபி புள்ளிவிவரங்கள் நம்முடைய நாட்டுக்குத் தொடர்பில்லாதது, தனிநபர் வருமான வரியை நீக்க வேண்டும், இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.

இதுதான் பாஜகவின் பொருளாதார சீர்திருத்த ஆலோசனைகள். இந்தியப் பொருளாதாரத்தைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்