கோதாவரி – காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் ஆதரவு..


கோதாவரி – காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதாக அந்த அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நதி இணைப்பு திட்டத்தில் மாற்றம்

என்.டபிள்யூ. டி. ஏ., என்ற தேசிய நீர் மேம்பாட்டு ஏஜென்சி துவக்கத்தில் நதி இணைப்பு திட்டத்தில் ஒன்பது இணைப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. அதற்கு ஏற்றவாறு தான் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

அதன்படி, மகாநதி – கோதாவரி இணைப்பு, இஞ்சபள்ளி – நாகார்ஜுனா சாகர் இணைப்பு, இஞ்சபள்ளி – புலிசிந்தலா இணைப்பு, போலாவரம் – விஜயவாடா இணைப்பு, அல்மாட்டி – பெண்ணாறு இணைப்பு, ஸ்ரீசைலம் – பெண்ணாறு இணைப்பு, நாகார்ஜுனா சாகர் – சோமசீலா அணை இணைப்பு, சோமசீலா அணை – கல்லணை இணைப்பு, காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், மகாநதி படுகையில் உள்ள உபரிநீர் கணக்கிடுவது இன்னும் முடியவில்லை. அத்துடன் தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில், இந்திராவதி ஆறு, கோதாவரியுடன் இணையும் இடமான இஞ்சபள்ளியில் அணை கட்டும் திட்டமும் இன்னும் முடியவில்லை. எனவே, ஒட்டுமொத்த திட்டத்தையும் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள என்.டபிள்யூ.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.

 

இந்திராவதி டூ காவிரி

 

முதல் கட்டத்தில் கோதாவரியின் துணை ஆறான இந்திராவதியின் உபரி நீர், மூன்று இணைப்புகள் மூலம் காவிரி படுகையில் கொண்டு சேர்க்கப்படும். இதன்படி, தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அக்னிபள்ளி என்ற இடத்தில் இந்திராவதி – கோதாவரி இணைப்பு ; நாகார்ஜுனா அணை – சோமசீலா அணை இணைப்பு; பெண்ணாறு( சோமசீலா) – காவிரியின் கல்லணை இணைப்பு மேற்கொள்ளப்படும்.

அக்னிபள்ளி தடுப்பு அணையில் இருந்து இந்திராவதியின் உபரி நீர் கோதாவரிக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து நாகார்ஜூனா அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து சோமசீலா அணைக்கும், பின்னர் கல்லணைக்கும் கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தின் மூலம், 700 டி.எம்.சி., தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.

 

டில்லியில் பேச்சு வார்த்தை

இது குறித்து பேச, டில்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் தெலுங்கானா மாநிலம் சார்பில் அந்த மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவ், ஆந்திர மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் தேவிநினி உமா மகேஸ்வர ராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

துவக்கத்தில் தென் மாநில நதிகள் இணைப்பு திட்டத்தை இரு மாநில அரசுகளும் ஏற்கவில்லை. கோதாவரியில் மேற்கொள்ளப்படும் நீர்பாசன திட்டங்கள் முழுமையடைந்த பிறகு, கோதாவரியில் உபரி நீருக்கு வாய்ப்பே இருக்காது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. இருப்பினும்,அவர்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சம்மதிக்க வைத்துள்ளார். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி நீர் விஷயத்தில் இரு மாநிலங்களின் உரிமைகளும் பறிபோகாது. நதி இணைப்பு திட்டத்தின் செலவில், 90 சதவீதத்தை மத்திய அரசே மேற்கொள்ளும். 10 சதவீத தொகையை தான் சம்பந்தப்பட்ட மாநில அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும் என நிதின் கட்கரி விளக்கி கூறியுள்ளார்.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2019 லோக்சபா தேர்தலை ஒட்டி, இந்த நதி இணைப்பு திட்டத்தை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பொருட்டே, இரு மாநில அரசுகளுடன் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

 

இரு மாநில அரசுகள் எதிர்ப்பு இல்லை

 

இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரு மாநில அரசுகளின் எண்ணம் மாறியுள்ளது. நதி இணைப்பு திட்டத்தை எதிர்க்கவில்லை. எனினும் சில நிபந்தனைகள் உள்ளன என மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநில தலைமை பொறியாளர் முரளிதர் கூறுகையில், ” இந்த திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், இந்திராவதி – கோதாவரி இணைப்பு பகுதியான அக்னிபள்ளியில், கோதாவரியின் உபரி நீரை கணக்கிடும் போது, தெலுங்கானாவின் நீர் தேவையை கருத்தில் கொண்ட பிறகே மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவிப்போம்,” என்றார்.

ஆந்திர அமைச்சர் தேவிநினி உமா மகேஸ்வர ராவ் கூறுகையில், ” நதி இணைப்பு திட்டத்தின் தொழில்நுட்ப விஷயங்களை தீவிரமாக ஆய்வு செய்த பிறகே, எங்கள் அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்படும். நதிகள் இணைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற திட்டத்தை நாங்கள் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளோம்,” என்றார்.


 

வைரமுத்துக்கு ஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியீடு

அப்துல்கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணம் தொடங்குகிறேன்: கமல் பேட்டி..

Recent Posts