ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 6, 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அதிகபட்சமாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா சார்பில் 471 பேர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 396 பேரை களமிறக்கி உள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 219 வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய அணி பங்கேற்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இம்முறை மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. மகளிர் பிரிவில் ரக்பி, பீச் வாலிபால் ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியா 14 போட்டிகளில் களமிறங்குகிறது. வழக்கம் போல் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றில் இந்தியா ஆதிக்கம் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் பாட்மிண்டன், ஸ்குவாஷ், பளு தூக்குதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுல், எட்டி எறிதல், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்திய போட்டியாளர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. மேலும் ஹாக்கியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி பதக்கம் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது.
காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று பிற்கல் 3 மணி அளவில் நடைபெறுகிறது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழா அணி வகுப்பில் இந்திய அணிக்கு பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தலைமை ஏற்று தேசிய கொடி ஏந்தி செல்கிறார். தொடக்க நாளில் போட்டிகள் ஏதும் நடைபெறாது. 5-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும். இந்தத் தொடரை சோனி சிக்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படுவதே காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆகும். இந்தத் தொடர் 1930 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. முதல் தொடரில் 11 நாடுகளை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டனர். 1950 வரை இந்தத் தொடர் ‘தி எம்பயர் கேம்ஸ்’ என்றே அழைக்கப்பட்டது. இதன் பின்னர் 1952-ல் பிரிட்டிஷ் எம்பயர் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு என பெயர் மாற்றப்பட்டது. இந்த பெயருடன் 1954-ம் ஆண்டு போட்டி கனடாவில் நடத்தப்பட்டது. இதன் பின்னர் 1978-ல் கனடாவில் நடைபெற்ற தொடரில்தான் காமன்வெல்த் விளையாட்டு என பெயர் மாற்றப்பட்டது.
காமன்வெல்த் போட்டிக்கான கிராமத்தில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகே ஊசி கிடந்ததால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இந்திய வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த வீரர்களும் சிக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்த காமன்வெல்த் அதிகாரிகள், இந்திய மருத்துவர் அமோல் படேலை கண்டித்துள்ளனர். இந்திய குத்துச்சண்டை வீரர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அமோல் படேல் உரிய அனுமதி இல்லாமல் வைட்டமின் -பி ஊசி உபயோகப்படுத்தி உள்ளார். இதனால் காமன்வெல்த் அதிகாரிகள் அவருக்கு எழுத்துப்பூர்வமாக கண்டனத்தை அனுப்பியுள்ளனர்.