முக்கிய செய்திகள்

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மீட்புப்பணி தீவிரம்

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு தேடி வருகிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டிபோச்சம் கோவிலுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள்,

பாப்பிகொண்டலு (Papikondalu) என்ற பிரபல சுற்றுலாத் தலத்திற்குச் செல்ல முடிவு செய்தனர்.

அந்த இடத்திற்கு, கோதாவரி ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும் என்பதால் ராயல் வசிஸ்டா என்ற சுற்றுலாப் படகில் அவர்கள் ஏறினர்.

படகோட்டி, மற்றும் ஊழியர்களைச் சேர்த்து மொத்தம் 62 பேர் அந்தப் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் விநாடிக்கு 5 லட்சத்து 13 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தேவிப்பட்டினம் அருகே கச்சனூர் என்ற இடத்தில் படகு சென்ற போது ஆற்றில் கவிழ்ந்தது.

குறிப்பிட்ட இடத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானதாலும், நீரின் சுழற்சியாலும்,

அந்தப் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்ததுடன், ஆற்றில் குதித்து சிலரை மீட்டனர்.