பிப்ரவரி 1, 1976 (‘மிசா’ கைதுகள்) : கோவி. லெனின்

Govi lenin recalls on MISA

_________________________________________________________________________________________________________

misa arrest
இந்திராகாந்தி ஆட்சியில் நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) நடைமுறைக்கு வந்தபோது, இந்தியாவில் பாதுகாப்பான மாநிலமாக இருந்தது தமிழகம்தான். ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற வடஇந்தியத் தலைவர்கள் பலர் தமிழகத்திற்கு வந்து, கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் பாதுகாப்படைந்தனர். எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, அதை பொதுக்கூட்டத்தில் உறுதிமொழியாக எடுத்ததும் தி.மு.க.தான். இதன்காரணமாக 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. அன்றிரவு முதலே கைதுகள் ஆரம்பமாயின. 

 


பிப்ரவரி 1ஆம் நாள் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மிசா (Maintenance of Internal Security Act -MISA) சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன், சிட்டிபாபு என தி.மு.க முன்னணியினர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டனர். மு.க.ஸ்டாலின் மீது விழுந்த அடிகளைத் தாங்க முயன்ற சிட்டிபாபு, அந்தத் தாக்குதலால் பின்னர் மரணமடைந்தார். கோ.சி.மணி, வைகோ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் misa dmkவெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். மதுரையில் சிறையில் அடைக்கப்பட்ட சாத்தூர் பாலகிருஷ்ணனும் சிறைக்கொடுமைகளுக்கு உயிர்ப்பலியானார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை மத்திய சிறையில் கடும் தாக்குதலுக்குள்ளானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், ஸ்தாபன (பழைய) காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரையும் மிசா சட்டம் சிறையில் அடைத்தது. ஓராண்டு சிறைவாசத்துக்குப் பிறகே 1977ல் அவர்கள் விடுதலையானார்கள்.

 


நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தி.மு.கவின் பெயரை மாற்றி சமுதாய இயக்கமாக நடத்தலாம் என்று நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் ’பாதுகப்பான’(?) ஆலோசனைகளை சொன்னார்கள். தலைவர் பதவியிலிருந்து கலைஞரை அகற்றவும் முயற்சி நடந்தது. ஆனால், அண்ணா தந்த பெயருடன்தான் அரசியல் இயக்கமாக தி.மு.க இயங்கும் என்பதில் உறுதியாக நின்று இயக்கத்தைக் கட்டிக்காத்தவர் கலைஞர். கழகத் தொண்டர்களின் உறுதியையும் -கழக நிர்வாகிகளில் யார் யார் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையும் அடையாளம் காண உதவியது நெருக்கடி நிலை. அதுதான் இன்றளவும் தி.மு.கவை தேர்தல் வெற்றி-தோல்விகளுக்கு அப்பால் உயிரோட்டத்துடன் வைத்துள்ளது என்பது் இன்றைய தலைமுறையினர் அறியாத செய்தி. 

 


அதுபோலவே பலரும் அறியாத அல்லது மறந்துபோன செய்தி- நெருக்கடி நிலைக்கு பயந்து மாநிலக் கட்சியான அ.தி.மு.கவை ‘அனைத்திந்திய’ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றினார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எமர்ஜென்சிக்கு ஆதரவாக இருந்த மற்றொரு இயக்கம்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்தனர் தோழர்கள்.

 

நன்றி – கோவி.லெனின் முகநூல் பதிவில் இருந்து….

_____________________________________________________________________________________________________

அரசியல் பேசுவோம் – 1 : செம்பரிதி  (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

அரசியல் பேசுவோம் – 2 : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

Recent Posts