பிளக்ஸ் பேனர் விழுந்ததில் விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வேதனையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க
துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத்தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
இதில் ஒரு பேனர் சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சுபஸ்ரீ கனடா செல்வதற்காக தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும்போது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலிவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல். அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?”
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.