தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக, புதுச்சேரியில் பேருந்துகள்,டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.
பெரும்பாலான கடைகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடுதல், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை கைவிடுதல் உட்பட 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் இன்று (ஜன.8) வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு ஊழியர் சம்மேளனமும் பங்கேற்றுள்ளன. புதுச்சேரியில் வேலைநிறுத்தத்துடன் முழு அடைப்புப் போராட்டமும் நடைபெறுகிறது.
இதன்படி, முழு அடைப்புப் போராட்டம் காலை 6 மணிக்குத் தொடங்கியது. இப்போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள சூழலில் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
ஆட்டோக்கள், டெம்போக்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.
திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல் பெரிய மார்க்கெட், நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் வீதி ஆகிய பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சூழலில் புதுச்சேரி, காரைக்கால் உட்பட 11 இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு ஏராளமானோர் கைதானார்கள்.
முழு அடைப்புப் போராட்டத்தினால் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தெருவோர டீக்கடைகள் தொடங்கி உணவகங்கள் வரை எதுவும் இயங்காததால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.